

கர்ப்பிணிப் பெண்ணொருவர் விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் இரவெல்லாம் வலப் பக்கம் ஒருக்களித்துப் படுத்திருந்ததால் வலியுடன் முனகிக்கொண்டே எழுகிறார். மெல்ல இடப் பக்கம் சாய்ந்து படுக்க முயன்று, அதையும் தவிர்க்கிறார். மல்லாந்து படுத்திடவும் முடியாமல் தலைக்குப்புறப் படுத்திடக் காலமும் கனியாமல் தவிக்கிறார்.
இந்த அலைக்கழிப்பினூடாக, தன் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்பது தெரியாத மன ஓட்டத்தில் உறக்கம் தொலைய விழித்துக் கிடக்கிறார். மகன் பிறந்தால் தன்னை எப்படி உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்கள், மகளாக இருந்தால் எப்படியெல்லாம் தாக்குவார்கள் என்று குடும்பத்தினரின் செயலை நினைத்துக் கண்ணீர் வடித்தபடி இருக்கிறார் - இது ஏதோ கடந்த நூற்றாண்டு சித்திரம் என நினைத்துக் கடந்துவிட முடியாது.
பெண்ணும் ஆணும் சமம் என்று பிரச்சாரம் வலுத்துவரும் இந்தக் காலத்திலும் பலரது வீடுகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் நிலை இதுதான்.
இந்தியாவில் 1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண் குழந்தைகளும் இருந்தனர். 1991-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஆயிரம் ஆண்களுக்கு 945 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர் எனவும் 2001-ல் அது 927-ஆகக் குறைந்தது எனவும் சொல்கிறது.
அடுத்த பத்தாண்டுகளில் அது மேலும் குறைந்து 918-ஆகக் குறைந்தது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனப் பிறப்புக்கு முன்பே கண்டுகொள்ளும் கருவிகளால் ஏற்பட்ட பாலினத் தேர்வும் பிறப்புக்குப் பின்னர் பெண் சிசுக் கொலையும்தான் இந்த ஆண்-பெண் விகித வேறுபாட்டுக்குக் காரணம்.
ஒருபுறம் பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூகக் கட்டமைப்பும் மறுபுறம் பிறப்புக்கு முன்பே பாலினத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும் மருத்துவ மனைகள் செயல்படுவதுமே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையக் காரணம் எனத் தெரியவந்தது.
நூற்றில் ஒன்று
அந்த வகையில் தமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாவட்டமாக கடலூர் கண்டறியப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த நல்லூர், மங்களூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிந்தால், அது குடும்ப பாரத்தை அதிகரிக்கும் எனக் கருதப்பட்டு அதை உடனடியாகக் கலைத்துவிடும் போக்கு கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் பெண் குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதற்கான உத்தரவாதத்தை அளிக்கவும் இந்திய அரசு, ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ (பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என்ற திட்டத்தை 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதன் மூலம் ஆண், பெண் குழந்தை விகிதத்தைச் சமன்படுத்த இந்தியா முழுவதும் 100 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் கடலூர் மாவட்டமும் ஒன்று.
கடலூரில் 2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழந்தைகள் எனப் பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 896-ஆகவும் 2014-ல் 854 எனவும் குறைந்தது.
இதையடுத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு விருத்தாசலத்திலும் நெய்வேலியிலும் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கிவந்த ஆறு ஸ்கேனிங் மையங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. மேலும், 153 ஸ்கேனிங் மையங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவை தவிர கருக்கலைப்பு செய்யும் கிராமங்களில் கிராம சுகாதாரச் செலிவியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், சுய உதவிக் குழுவினர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஸ்கேனிங் மைய உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகியோரின் உதவியோடு விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டது. அதன் விளைவாகக் கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பெண் குழந்தை பிறப்பு விகிதம் 886/1000 என உயர்ந்தது.
தேசிய அளவில் கௌரவம்
ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு நினைவுப் பரிசும் அரசு சார்பில் ரூ.700-ம் பெற்றோர் பங்களிப்பு ரூ.300-ம் சேர்ந்து ரூபாய் ஆயிரத்துடன் செல்வமகள் சேமிப்புக் கணக்கையும் தொடங்கிக் கொடுப்பதோடு பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
இவைதவிர அரசின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், வளரிளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கான அரசின் பிரத்யேகத் திட்டங்கள் குறித்துக் கிராமங்களில் எடுத்துச் சொல்லி, பெண் குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 929-ஆக உயர்ந்தது. இந்தத் திட்டத்தைக் கண்காணித்துவரும் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டத்தைச் சிறப்பான முறையில் செயல்படுத்திவருவதாக கடலூர் மாவட்டத்தைத் தேசிய அளவில் அங்கீகரித்து கடந்த 2017-ல் கௌரவித்திருப்பதாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி தெரிவித்தார்.
கருவுற்ற பெண்களின் கருவில் உள்ள பாலினத்தை அறியும் முறையைத் தடைசெய்ததோடு, பெண் குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் கடலூர் மாவட்ட சுகாதாரம், சமூக நலத் துறையினரின் இந்தச் செயல்பாடு, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மற்ற மாவட்டங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம்!