

நவராத்திரியின் போது பெரும்பாலோர் வீடுகளில் கொலு வைப்பார்கள். நவராத்திரி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தெய்வ உருவங்கள் தொடங்கி மனிதர்கள், விலங்குள், பறவைகள், செடி கொடிகள் எனப் பலவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வரும். களிமண், காகிதக் கூழ் போன்றவற்றால் செய்யப்படும் நவராத்திரி பொம்மைகளை வாங்க சென்னைவாசிகளின் முதல் தேர்வாக இருப்பவை மயிலாப்பூர் மாட வீதிகளே. இப்பகுதியில் வரிசையாக அமைந்திருக்கும் கொலு பொம்மைக் கடைகளைப் பார்த்தபடி செல்வது வானவில்லைக் கடந்துசெல்வதுபோல் இருக்கும்.
இங்கு கடந்த 50 ஆண்டுகளாகக் கொலு பொம்மை விற்பனையில் ஈடுபட்டுவருகிறார் பத்மினி. மயிலாப்பூர் தெப்பக்குளம் எதிரே சாலையோரத்தில் இருக்கிறது இவரது கடை. பழ வியாபாரம் செய்யும் இவர், புரட்டாசி மாதத்தில் தன் தம்பியுடன் சேர்ந்து கொலு பொம்மைகளை விற்பனை செய்கிறார்.
“எங்க அப்பா காலத்திலிருந்தே இந்த வியாபாரத்தைச் செய்யறோம். என் அம்மாவோட சேர்ந்து நானும் பத்து வயசுல இருந்து இந்த வியாபாரத்துல இருக்கேன். பழ வியாபாரம் செய்தாலும் எங்க மனசு முழுக்க இந்தக் கொலு பொம்மைங்க மீதுதான் இருக்கும். வருஷம் தொடங்குனா முதல் வேலையா பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுப்போம். கொலு பொம்மைகளைச் செய்யற கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், மாயவரம், வேலூர், பன்ருட்டி இப்படிப் பல இடங்களில் இருக்கும் கைவினைக் கலைஞர்களிடம் செய்து வாங்கறோம்” என்கிறார் பத்மினி.
பள்ளிகொண்ட பெருமாள், ராதா, கண்ணன், சப்த மாதா, ஆஞ்சநேயர், காளிகாம்பாள், லலிதாம்பிகை, பைரவர், கஜேந்திரவரதர், சுருட்டபள்ளி சிவன், முப்பெரும் தேவிகள் எனப் பல்வேறு தெய்வங்கள் இவரது கடையில் அருள்பாலிக்கின்றனர்.
“ஒவ்வோர் ஆண்டு நவராத்திரியின்போது சில குறிப்பிட்ட பொம்மைகளை வாடிக்கையாளர்கள் கேட்பார்கள். அது போன்ற பொம்மைகளை பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்துச் செய்யச் சொல்வோம். அதேபோல் இப்போ நிறையப் பேர் கொலு வைப்பதால் வியாபாரம் நல்லா இருக்கு. எங்ககிட்ட நூறு ரூபாய்ல இருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல வரைக்கும் பொம்மைங்க இருக்கு. ஆனா, நாங்க லாபத்தைப் பார்த்து வியாபாரம் செய்யலை. வருஷத்துல ஒரு முறையாவது இந்தப் பொம்மைகளைக் கண்ணுக்கு நிறைவா பார்க்கணுங்கறதுதான் என் ஆசை” என்கிறார் பத்மினி.
படங்கள்: க.ஸ்ரீபரத்