

பாலிவுட் படங்களில் அப்பா கதாபாத்திரம் என்றாலே அலோக் நாத்தைத்தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர். அவர் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் இயக்குநர் வின்டா நந்தா கூறியிருப்பது இது: ‘என் நெருங்கிய தோழியின் கணவர் அவர். நாங்கள் அனைவரும் நாடகப் பின்னணி கொண்டவர்கள். நான் அப்போது ‘தாரா’ சீரியலைத் தயாரித்து, எழுதினேன். சிறந்த நடிகர் அவர். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
ஒரு பார்ட்டிக்கு என்னை அழைத்தார். என் நெருங்கிய தோழியின் கணவர் என்பதால், எனக்குச் சந்தேகம் ஏற்படவில்லை. பார்ட்டிக்குச் சென்ற இடத்தில் என் மதுவில் ஏதோ கலந்துவிட்டார். என்னை காரில் வந்து வீட்டில் டிராப் செய்வதாகக் கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். அதன் பிறகு நடந்தது எனக்குச் சரியாக நினைவில் இல்லை. என் வாயில் மது ஊற்றப்பட்டது தெரிந்தது. என்னை ஏதோ செய்கிறார் என்று தெரிந்தது. மறுநாள் மதியம் கண் விழித்தபோதுதான் நான் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது தெரிந்தது’
தவறுதான் மன்னித்து விடுங்கள்
சேத்தன் பகத், இந்திய அளவில் பிரபலமான ஆங்கில எழுத்தாளர். அவர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய திருமணத்துக்குப் பின் சேத்தன் பகத் அவரிடம் தவறாகப் பேசியதாகவும் பாலியல் உறவு கொள்ள விரும்பியதாகவும் ஆதாரத்துடன் அவர் தெரிவித்தார்.
அதற்கான வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட்களையும் அவர் வெளியிட்டார். இதுகுறித்து விளக்கம் அளித்தபோது அந்த மெசேஜ்கள் அனைத்தும் உண்மைதான் என்று சேத்தன் பகத் கூறினார். “இது குறித்து என் மனைவியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டேன். பல ஆண்டுகளுக்கு முன் அப்படிப் பேசியதற்கு மன்னித்துவிடுங்கள்” என்று சேத்தன் பகத் தன் ஃபேஸ்புக் பதிவில் ரசிகர்களிடமும் அந்தப் பெண்ணிடமும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
முதல் குற்றச்சாட்டு
‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ நாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பிரபல பாலிவுட் நடிகர் நாணா படேகர் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழில் ‘பொம்மலாட்டம்’, ‘காலா’ படங்களில் நடித்தவர் நாணா படேகர். “2008-ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்தப் பாடலில் வலுக்கட்டாயமாக அவர் உள்ளே நுழைந்தார்.
நான் அவரைக் கண்டித்தபோது, ‘எனக்குப் பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நாணா படேகரின் இந்தச் செயலுக்குப் படக் குழுவினர் ஆதரவாகச் செயல்பட்டனர். இது குறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகரின் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தினரோடு காரில் சென்றபோது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம்” என தனுஸ்ரீ கூறியுள்ளார்.
அமைச்சர் #metoo
மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது ஆறு பெண்கள் பாலியல் சீண்டல் குற்றம் சாட்டியுள்ளனர். ‘சுமா ராஹா’ வெளியிட்டுள்ள பதிவில், ‘1995-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த அக்பரைப் பேட்டி எடுக்கச் சென்றேன். அப்போது, அவர் போதையில் இருந்தார். அவரது செயல்கள் என்னை மிகவும் பாதித்தன’ எனக் கூறியுள்ளார்.
அக்பரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு பெண்ணான பிரேர்னா சிங் பிந்த்ரா தனது பதிவில், ‘பணி தொடர்பாகக் கலந்தாய்வு நடத்துவதற்கு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது, நள்ளிரவு இருக்கும். அங்கு நான் நரக வேதனையை அனுபவித்தேன்’ என்று கூறியுள்ளார். அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ள பிரியா ரமணி கூறுகையில், “அவர் இதைச் செய்யவில்லை என்றால் இந்தக் குற்றச்சாட்டில் கண்டிப்பாக அவருடைய பெயர் இடம் பெற்றிருக்காது” என்றார்.
விபரீத நாடகம்
எதையும் தர்க்க ரீதியாகப் பேசுவது வருண் குரோவரின் பாணி. இன்றைய தேதியில் பாலிவுட்டின் நம்பர் ஒன் பாடலாசிரியர். ‘காமெடி என் மொழி. சமூக அக்கறை என் அடையாளம்’ எனப் பெருமையாகச் சொன்ன அவரது அடையாளம் இன்று கேள்விக்குள்ளாகி உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவருடன் படித்ததாகச் சொல்லிக்கொள்ளும் பெண் எழுதியிருக்கும் பதிவு இது.
“வருண் கல்லூரியில் என்னைவிட ஒரு வருடம் சீனியர். அவர் அங்கிருந்த நாடகக் குழுவில் இருந்தார். ஒரு மதியம், கல்லூரியின் ஆண்டு விழா நாடகத்துக்கான பயிற்சிக்கு என்னை அழைத்தார். நான் திலோத்தமா (அப்சரஸ்) மாதிரி இருப்பதாகச் சொன்னார். நான் சிரித்தேன். தன்னை விஸ்வகர்மா என்று சொன்னார். அதற்கும் நான் சிரித்தேன். அவரது நாடகத்தில் திலோத்தமாவாக எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
அதன்படி நான் நடித்தபோது, திடீரென்று என்னைப் பின்னால் இருந்து கட்டிப்பிடித்தார். நடப்பதன் விபரீதத்தை உணர்ந்தவுடன் நான் அவரைத் தள்ளிவிட்டுட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன்.”
எண்ணமும் சொல்லும்
#metoo இயக்கம் ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும். அது நம்மை சுயபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். உண்மையை உலகுக்கு நாம் சொல்லியே ஆக வேண்டும். முகமூடிகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் வக்கிர முகங்களை அம்பலப்படுத்துவதற்குப் பெண்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். குற்றம் சுமத்துபவர்களை அல்லாமல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கூண்டில் ஏற்றுவோம்.
- கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர், திமுக மகளிரணிச் செயலாளர்.