

திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் விவாதம் நடந்துவருகிறது. பிடிக்காத ஒருவருடன் சேர்ந்து வாழ்வதைவிட, விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து செல்வதே சரி என்பதும் இந்தத் தீர்ப்பின் ஓர் அங்கம்.
அதேநேரம் தன் கணவன், திருமணம் தாண்டிய உறவு வைத்துள்ள காரணத்தால் மனைவிக்குத் தாங்க முடியாத மனவேதனை ஏற்பட்டால் இது கணவர் செய்யும் கொடுமை (Cruelty) என்று கூறி, பாதிக்கப்பட்ட மனைவி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498 (ஏ) மூலம் அந்தக் கணவர் மீது வழக்குத் தொடுத்து மூன்று ஆண்டுகளோ அதற்குக் குறைவாகவோ சிறைத் தண்டனை பெற்றுத்தர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு முன்பு திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றம் என்ற 497 சட்டப் பிரிவின்படி ஓர் ஆண், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டால் அந்த ஆணுடைய மனைவியால் புகார் கொடுக்க முடியாது.
ஆனால், அந்தக் கணவர் உறவு வைத்திருக்கும் பெண்ணுடைய கணவரால், இந்தத் திருமணம் தாண்டிய உறவு குறித்துப் புகார் அளிக்க முடியும். இதனால், இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள ஆணுக்கு ஐந்தாண்டுவரை சிறைத் தண்டனை பெற்றுத்தர முடியும். இதன் அடிப்படையில் நீதிமன்றங்களுக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. தவிர இந்தச் சட்டத்தை ஆண் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதாலும் அது நீக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அதற்குப் பதில் ஏற்கெனவே இருந்த 498 (ஏ) சிவில் குற்றப் பிரிவில் திருமணம் தாண்டிய உறவு குற்றமாக மாற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி தன் கணவர் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் காரணமாகக் காட்டி பாதிக்கப்பட்ட மனைவி விவாகரத்து பெறமுடியும். ஆனால், இந்தச் சட்டம் உண்மையிலேயே பெண்ணுக்கு ஆதரவானதா என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாரா ராஜனிடம் கேட்டோம்.
“497 சட்டப் பிரிவைப் பழிவாங்கும் நோக்கத்துடனும் ஆண்கள் பயன்படுத்தலாம் என்பதாலும் அது கிரிமினல் குற்றமல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அது கிரிமினல் குற்றமாக இருந்தால் பலகட்ட பிரச்சினைகளைச் சந்தித்துப் பின்னர் கணவனும் மனைவியும் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்குப் பதில் சம்பந்தப்பட்ட கணவன் - மனைவி இருவரும் சுமுகமாக விவாகரத்து வாங்கிக்கொள்ளலாம் எனச் சட்டம் 498 (ஏ) சொல்கிறது.
பாதிக்கப்பட் மனைவி, தனித்து வாழ்வதற்கான வழி வகை இல்லாதபட்சத்தில், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க இந்தச் சட்டத்தில் இடம் உண்டு. ஒருவேளை அந்தப் பெண் படித்து, வேலைக்குச் சென்றுகொண்டிருந்தால் அவர்களுக்கு ஜீவனசம்கூடக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
திருமண பந்தத்தில் பிரச்சினைகளுடன் சேர்ந்து வாழ்வதைவிடப் பிரிந்து போய்விடுவது நல்லதுதானே. அதைத் தாண்டி அதைக் குற்றமாகக் கருத வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் 498 (ஏ) சட்டப் பிரிவின் மூலம் வலியுறுத்தியுள்ளது” என்றார் தாரா.
பிரச்சினைகளுடன் சேர்ந்து வாழ்வதை விடப் பிரிந்துசெல்வதே நல்லது எனச் சட்டம் சொல்வதை மறுப்பதற்கில்லை. இது பெண்களுக்கான சுதந்திரவெளியை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது. ஓர் ஆண் முதல் மனைவி இருக்கும்போது திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடுவது பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரித்தாலும் பாதிக்கப்பட்ட மனைவி, பல்வேறு காரணங்களால் அந்தக் குடும்பப் பிணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையே பெரும்பாலும் நிலவுகிறது. ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பும் இதற்கு முக்கியக் காரணம்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பது போன்ற கற்பிதங்களையும், ஆணைத் தாண்டி பெண்கள் சுயமாக முடிவெடுக்க முடியாத அல்லது அனுமதிக்கப்படாத நிலையையும், அவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி, வேலை போன்றவற்றாலும் கணவனின் தவறுகளைப் பெண்கள் பொறுத்துப்போக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அப்படியான பெண்களுக்கு எந்தச் சட்டம் தீர்வளிக்கும்?