

வரலாற்றில் நிலைத்த வீரர்கள்
கால்பந்துக்கு எப்படி பிரேசிலோ அதே போன்று ஹாக்கிக்கு பிரசித்திப் பெற்றது இந்தியா. ஒரு ரோபோவைப் போல் திட்டமிட்டபடி ஆடாமல், தேசிய விளையாட்டான ஹாக்கியைத் தங்கள் உள்ளுணர்வுக்கேற்ப இயல்பாக விளையாடும் நம்மவர்களின் ஆட்டத்தில் ஒரு ஜீவன் இருக்கும். ஹாக்கியில் 1928-ல் தொடங்கிய எழுச்சி மிகு ஆட்டம் 1980 வரை நீடித்துள்ளது. ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. ஹாக்கி மைதானத்தில் செயற்கைப் புற்களின் நுழைவுக்குப் பின், ஹாக்கி ரோபோக்கள் ஆடும் செயற்கைத்தனமான ஆட்டமாக மாறியது.
இந்தியா ஹாக்கி அணியின் பலத்தையும் நளினத்தையும் இந்தச் செயற்கைப் புற்கள் நீர்த்து போகச் செய்தன. இந்தியாவுடன் விளையாடவே பயந்த அணிகளிடம் இந்தியா படுமோசமாகத் தோல்வியடைந்தது. காலம் இப்போது மாறிவிட்டது என்பதை, இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்று உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளது. 21-0 என்ற கோல் கணக்கில் ஹாக்கியில் வெல்வது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி அதைச் சாதித்து காட்டியுள்ளது.
வெறும் அலங்காரத் தங்கம் அல்ல
2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இரண்டு தங்க பதக்கங்களைப் பெண்கள் வென்றுள்ளனர். மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் வென்றது முதல் தங்கம். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரஹி சர்னோபத் வென்றது இரண்டாவது தங்கம். போட்டியின்போது ரஹியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எல்லோருடைய கவனமும் எதிர்பார்ப்பும் 16 வயதே நிரம்பிய மனு பாகர் மீதுதான் குவிந்திருந்தது. அதற்கு ஏற்ப ‘மனு’வும் தகுதிச்சுற்று போட்டியில் அதிகமான புள்ளிகளைக் குவித்து சாதனை படைத்திருந்தார்.
இறுதிப் போட்டியில் நிதானத்தை இழக்காததால், தங்கப் பதக்கம் ரஹிக்குக் கிடைத்தது. மல்யுத்தத்தில் வினேஷ் பெற்ற வெற்றி மலைப்புக்குரியது. அந்தத் தொடர் முழுவதும் எதிராளிகளை வினேஷ் அநாயாசமாகத் தூக்கிச் சுழற்றி வீழ்த்தினார். நுணுக்கமும் வேகமும் நிறைந்த ஆட்டத்திறனால், இறுதிப்போட்டி உள்ளிட்ட எல்லாப் போட்டிகளிலும் துளி வியர்வைகூடச் சிந்தாமல், எதிரிகளை விரைவாகவும் எளிதாகவும் வீழ்த்தி வெற்றியைப் பெற்றார்.
பால் பேதம் கடந்த #metoo
உலகின் பெரு நகரம் தொடங்கி குக்கிராமம்வரை #metoo இயக்கம் இன்று வெகுதீவிரமாகப் பரவியுள்ளது. 70 வயது முதியவர் தொடங்கி 18 வயதுப் பெண்வரை, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகவும் துணிவுடனும் சொல்லும் நிலை இன்று உள்ளது. பணபலம், புகழ், செல்வாக்கு போன்ற காரணங்களால் சமூகத்தால் பொதுவெளியில் போற்றிக் காக்கப்பட்ட பல பிரபலங்களின் முகத்திரைகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம் ஏசியா அர்ஜென்டோ என்றால் அது மிகையல்ல.
ஹார்வி வெய்ன்ஸ்டினால் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களைத் துணிவுடன் பகிரங்கமாகச் சொன்னதன் மூலம், #metoo இயக்கத்தின் முகமாக 42 வயது ஏசியா அர்ஜென்டோ மாறினார். அவரது துணிச்சலும் உறுதியும் தெளிவும் பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் தெளிவைப் பெண்களுக்குக் கொடுத்தது. இந்த நிலையில், சமீபத்தில் 2013-ம் ஆண்டு தனது 17-ம் வயதில் ஏசியா அர்ஜென்டோவால் தான் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ‘ஜிம்மி’ எனும் நடிகர் குற்றம் சாட்டினார்.
முதலில் கணிசமான பணம் அவருக்கு அர்ஜென்டோவின் சார்பாக வழங்கப்பட்டது. பின் அந்தக் குற்றம் மறுக்கப்பட்டது. தற்போது அந்தக் குற்றச்சாட்டை உண்மை என அர்ஜென்டோ ஒப்புக்கொண்டுள்ளார்.
குறைகளைக் கடந்தவருக்கு வயது 107
இஸ்மத் என்றால் உருது மொழியில் குறைவற்ற தூய்மை என்று பொருள். புகழ்பெற்ற உருது எழுத்தாளரான இஸ்மத்தின் வாழ்வும் அதை உறுதிசெய்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 1911 ஆகஸ்ட் 21-ல் இஸ்மத் சுக்தாய் பிறந்தார். அவருடைய சகோதரர் அளித்த உத்வேகமும் உந்துதலும் இஸ்மத்தை இளம் வயதிலேயே எழுத்தாளராக்கியது. சமூக நீதி, பெண் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், சம உரிமை போன்றவையே அவர் எழுத்தின் முக்கிய கருப்பொருட்கள். மனித உரிமை கோரலுக்கான தளமாகத் தனது எழுத்துகளை வடிவமைத்துக்கொண்டது இஸ்மத்தின் தனிச்சிறப்பு.
கட்டுப்பெட்டித்தனம் மிகுந்த ஒரு இஸ்லாம் குடும்பத்தில் பிறந்தபோதிலும், சுதந்திரச் சிறகடித்து அடிமைத்தளையைச் சிதறடித்த ஒன்றாக இஸ்மத்தின் எழுத்துக்கள் இருந்துள்ளன. 1942-ல் வெளிவந்த அவருடைய சிறுகதையான Lihaf, இன்றும் பொதுவெளியில் நாம் பேசத் தயங்கும் காதல், காமம், தன்பால் ஈர்ப்பு போன்றவற்றை வெகு இயல்பாக வெளிப்படுத்தியுள்ளது. அவரது 107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த புதன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
இசை அரசியின் முதல் செல்ஃபி
செல்ஃபி பிரபலமாகி ஐந்து வருடங்கள்தாம் ஆகிறது. 2013-ல்தான் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ‘செல்ஃபி’ என்ற சொல் சேர்க்கப்பட்டது. ஆனால், 1950-களிலேயே இந்திய திரைப்பட இசை உலகின் முடிசூடா அரசியான லதா மங்கேஸ்கர், செல்ஃபி எடுத்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா? இதைச் சொல்வது லதா மங்கேஸ்கர் என்பதால் நாம் அதை நம்பித்தான் ஆக வேண்டும். கடந்த செவ்வாய் அன்று தனது கறுப்பு வெள்ளை ஒளிப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அதன் கீழே “நமஸ்கார். என்னை நானே
1950-ல் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. இன்று இதுதான் உங்களால் செல்ஃபி என்றழைக்கப்படுகிறது’ என்று எழுதியிருந்தார். அந்தப் படம் அவருடைய ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை 35,000 பேர் அதை ‘லைக்’ செய்துள்ளார்கள், 4,000 பேர் மீண்டும் அதைப் பகிர்ந்துள்ளார்கள்.