

காலில் விழுந்த வாஜ்பாய்
மதுரையைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் விவசாய வேலைக்குச் சென்றார். அங்கே சரியான கூலியும் வேலையும் கிடைக்காமல் பலர் இருப்பது அவரை வருத்தியது. இதனால், 1980-ல் வேலையின்றி வறுமையின் சூழலில் சிக்கித் தவித்த தன் கிராம மக்களின் ஏழ்மையைப் போக்க நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார். அதில் விவசாயக் கூலியாட்களை அணி திரட்டி விவசாயப் பணிகளைச் செய்யவைத்தார்.
அதில் வந்த மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த 1990-ல் ‘களஞ்சியம்’ எனும் சிறுசேமிப்புத் திட்டத்தைத் தொடங்கினார். சமுதாயப் பணியில் சிறந்து விளங்கும் மகளிருக்கு இந்திய அரசு அளிக்கும் ‘ஸ்ரீ ஸ்திரீ சக்தி’ விருதை 1999-ல் அப்போதைய பிரதமரான வாஜ்பாய் வழங்கினார். சின்னப்பிள்ளையின் சேவையைப் பற்றித் தெரிந்துகொண்ட வாஜ்பாய் விருது வழங்கிய நிகழ்வில், சட்டென சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கியது சமீபத்தில் நினைவுகூரப்பட்டது.
கொத்தனாராகும் பெண்கள்
கட்டுமானப் பணிகளில் செங்கல், கான்கிரீட் கலவை ஆகியவற்றைச் சுமக்கும் சித்தாள் பணியில் மட்டும் பெண்கள் ஈடுபடுகின்றனர். கட்டிடம் கட்டும் கொத்தனாராகவும் கான்கிரீட் கலவை தயாரிக்கும் ‘பெரிய ஆளாக’வும் ஆண்கள் மட்டுமே இருந்துவருகின்றனர். பணிகளுக்கேற்ப, கூலித்தொகையும் வேறுபடும். இந்நிலையில் கடந்த புதன் அன்று மாமல்லபுரம் ஊராட்சிப் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம் கருதி அவர்களுக்கும் கொத்தனார் தொழிற்பயிற்சி அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தொழிலில் விருப்பமுள்ள பெண்களுக்கு மாநில ஊரகப் பயிற்சி நிறுவனம் மூலம், பயிற்சி அளிக்கவும் தொழிற்கருவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியே தன்னந்தனியே
பெண்கள் தனியாகச் சுற்றுலா செல்லும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. தனியாகச் சுற்றுலா செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 11 சதவீதம் அதிகரித்துவருகிறது என உள்நாடு, வெளிநாடுகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனங்கள் அளித்த தரவுகள் கூறுகின்றன. தனியாகச் சுற்றுலா செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களில் 75 சதவீதத்தினர் பெண்கள்தாம்.
பெண்களின் பொருளாதார வளர்ச்சி, இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதிக ஊதியம் பெறும் பெண்கள், தொழில்முனைவோர் ஆகியோர் தனியாகச் சுற்றுலா செல்லவே விரும்புகின்றனர். இந்திய நகரங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் பெண்கள் தனியாகச் சுற்றுலா செல்வதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மறுமணத்துக்குத் தடையில்லை
பாகிஸ்தானில் வசிக்கும் இந்துப் பெண்கள் விவாகரத்து கோரி நீதிமன்றங்களை நாட முடியாது என்ற நிலை இப்போது மாறியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் மறுமணத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நந்தகுமார், சிந்து மாகாண சட்டசபையில் தாக்கல் செய்த மசோதாவின் பலனாக இது நிகழ்ந்துள்ளது. இந்து மதப் பெண்கள் விவாகரத்து பெற அனுமதிக்க வேண்டும்; விவாகரத்தான பெண்களும் கணவரை இழந்த பெண்களும் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்;
சிந்து இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது மசோதாவில் கோரியிருந்தார். இந்தச் சட்ட மசோதா ஒருமனதாகச் சிந்து மாகாண சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது அது ஆளுநரின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி திருமணமான இந்து மதத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருவரும் இனி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். விவாகரத்தான பெண்களும் கணவனை இழந்த பெண்களும் இனி மறுமணம் செய்யலாம்.
முளையில் விளைந்த பயிர்
இந்தியாவின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 அன்று பிறந்தவர் கார்மென் காண்டே. 1907-ல் பிறந்த இவருக்குக் கவிஞர், ஆசிரியர், நாவலாசிரியர், நாடகாசிரியர் எனப் பலமுகங்கள் உண்டு. கார்டெகேனா எனும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரும் இவரே. குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்தின் மீது இவருக்கு ஈடுபாடு வந்துவிட்டது. பெற்றோர் அதை ஊக்குவிக்காததால் வாசிப்பும் எழுத்தும் அவரது தூக்கத்தைப் பறித்துக்கொண்டன. 15 வயதிலேயே அவர் எழுதிய ‘லா லெக்சுரா’ எனும் புத்தகம் வந்துவிட்டது.
1978-ல் ராயல் ஸ்பானிஷ் அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். ‘ஃப்ளோரெண்டினா டெல்மார்’ எனும் புனைபெயரில் அவர் படைத்துள்ள குழந்தை இலக்கியங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அவரது 111-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த புதன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.