Last Updated : 18 Aug, 2018 06:12 PM

 

Published : 18 Aug 2018 06:12 PM
Last Updated : 18 Aug 2018 06:12 PM

‘முதல்’வர்கள்: சென்னையின் பெண் ஆளுமைகள்

இன்று புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியால் 1639 ஆகஸ்ட் 22-ல் வாங்கப்பட்டது. முதலில் கோட்டைதான் எழுப்பப்பட்டது. பின் அந்தக் கோட்டையைச் சுற்றிச் சிறு சிறு கிராமங்கள் உருவாயின. அவை விரிவடைந்து ஒன்றாக இணைந்து சென்னை என்ற மாநகரம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நாள்தான் சென்னை உருவான நாளாக இன்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னை என்ற நகரம் உருவாகி 379 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2004 முதல் இந்த நாள் ‘மெட்ராஸ் டே’ என்று சென்னைவாசிகளால் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுவருகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை, நேப்பியர் பாலம், எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ் மால் எனச் சென்னையின் அடையாளங்கள் மாறிக்கொண்டேவருகின்றன. கால ஓட்டத்தில் எல்லாமே அதிவேகமாக மாறுகின்றன. இருந்தும், சென்னையின் ஜீவன் மட்டும் இன்றும் காலத்தை வென்ற ஒன்றாக உள்ளது.

சென்னையை வெறுமனே மனிதர்கள் வசிக்கும் பகுதி என்றோ கட்டிடங்களும் அகண்ட சாலைகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு திடீர் நகரம் என்றோ சொல்லிவிட முடியாது. அது பெரிய வரலாற்றுத் தொடர்ச்சிகொண்ட நகரம். திராவிடம் எனும் சித்தாந்தத்தின் அடையாளம். திராவிடர்களாகிய தமிழர்களும் தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் திராவிடம் என்ற குடையின் கீழ்  ஒற்றுமையாக வாழ்ந்த, வாழும் நகரம் அது.

அரசியல், அறிவியல், சமூக நீதி, சட்டம், ஊடகம், வானியல், விண்வெளி எனப் பல தளங்களில் ஆகச் சிறந்த ஆளுமைகளைச் சென்னை உருவாக்கியுள்ளது. விரும்பியதை அடையும் வாய்ப்பும் துணிவும் பெண்களுக்கு இன்று உள்ளன. இன்று ஒரு பெண் பேருந்து ஓட்டுநராகவோ விமான ஓட்டியாகவோ இருந்தால், அதில் பெரிய ஆச்சரியம் இல்லை. 1930-களும் 1940-களும் அப்படி அல்ல. பெண்கள் சாலையில் நடந்தாலே வியப்பாகப் பார்க்கப்பட்ட காலம் அது.

பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை அன்று வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கிக் கிடந்தது. அத்தகைய காலகட்டத்தில்தான் தாரா செரியன், ஹானா ரத்னம் கிருஷ்ணம்மா, சுனிதி நாராயணன், உஷா சுந்தரம் போன்ற மிகப் பெரும் ஆளுமைகள் சென்னையில் தடம் பதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நிறைந்த சாதனை வாழ்வே இன்றைய பெண்களின் சுதந்திர வாழ்வுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

தாரா செரியன்

1913-ல் பிறந்து 2000-ல் மறைந்த தாரா செரியன் சென்னையின் முதல் பெண் மேயர். 1950-களில் தாரா மிகவும் பிரசித்தி பெற்ற சமூகச் செயற்பாட்டாளராக விளங்கினார். 1957-ல் அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய சிங்காரச் சென்னைக்கு அடித்தளம் அமைத்தவர் என தாராவைச் சொல்லலாம். பெரிய திட்டங்களை இயற்றாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் சின்ன சின்ன விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்தினார்.

சேரிகளில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான தண்ணீர், முறையான மின்சாரம், கழிவறை போன்றவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தி, அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பயன்பெறும் விதமாக, மதிய உணவுத் திட்டத்தை 1958-லேயே கொண்டு வந்தார். அவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவருக்கு 1967-ல்  ‘பத்ம பூஷன்' பட்டம் வழங்கப்பட்டது.

ஹானா ரத்னம் கிருஷ்ணம்மா (ஹெச்ஆர்கே)

சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண் இவர். தாயின் பெயரை ‘இன்ஷியலாக'ப் போடுவதை இப்போதுதான் நாம் பரவலாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளோம். ஹானாவோ தன் தாயாரின் பெயரைத் தனது ‘இனிஷியலா'க 19-ம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியுள்ளார். இவருடைய தாயாரின் பெயர் சிவராம கிருஷ்ணம்மா. அவருடைய தாத்தாவின் பெயர் ரத்னம்.

hanajpgஹானா ரத்னம் கிருஷ்ணம்மாright

கமலா சத்தியநாதன் என்றால்தான் பலருக்கு இவரை இன்று அடையாளம் தெரியும். சத்தியநாதன் உடனான திருமணத்துக்குப் பின் அவருடைய பெயர் கமலா என்று மாற்றப்பட்டது. இந்தியாவில் பெண்களுக்காக, ‘The Indian Ladies Magazine’ என்ற முதல் ஆங்கில பத்திரிகையைத் தோற்றுவித்தார்; அதை வெற்றிகரமாகவும் நடத்தினார். மெட்ராஸ், ஆந்திரா ஆகிய பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராகவும்  அவர் இருந்துள்ளார்.

உஷா சுந்தரம்

‘பெண் சுதந்திரம் என்றால் என்ன?’ என்று கேட்கும் நிலையே 1900-களில் இருந்தது. பிற்போக்குத் தனமும் ஆணாதிக்கமும் அடிமைத்தளையும் போட்டி போட்டுப் பெண்களின் குரல் வளையை நெருக்கிய காலகட்டம் அது. அத்தகைய சூழலில்தான், சென்னையில் 1924-ம் ஆண்டு உஷா பிறந்தார். இவருடைய கணவர், கேப்டன் சுந்தரம் அன்றைய டாடா ஏர்வேஸ்ஸின் பைலட். சைக்கிள் ஓட்டக் கற்பதே கனவிலும் சாத்தியமற்ற அந்தக் காலத்தில், சுந்தரம் தன்னுடைய மனைவிக்கு அவருடைய 20-ம் வயதில், விமானம் ஓட்டக்  கற்றுக்கொடுத்தார்.

உஷா முதலில் ஓட்டிய விமானம், மைசூர் மகாராஜா ஜெயசமராஜ உடையாருக்குச் சொந்தமான VT-AXX. 1945 முதல் 1951வரை சுந்தரம் தம்பதி இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் விமானத்துக்கு பைலட்டுகளாக இருந்துள்ளனர். 1949-ல் இந்திய அரசு விமானப் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் உஷாவுக்கு உண்டு. பிஸ்டன் இன்ஜின் விமானத்தை அதிக தூரம் ஓட்டிய பெண்மணி என்ற பெருமையும் உஷாவுக்கே உண்டு.

ushajpgஉஷா சுந்தரம்

சுந்தரத்தின் ஓய்வுக்குப்  பிறகு, நேருவுக்கு பைலட் ஆக இருந்துள்ளார். விலங்குகளின் மீது சிறு வயது முதலே இவருக்குக் காதல் உண்டு. அந்தக் காதலால், 1959-ல் தனது வீட்டிலேயே இவர் ‘ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா’வைத் தொடங்கினார். சுதந்திரமாக வானத்தில் சிறகடித்துப் பறந்த உஷா, தன்னுடைய இறுதி நாட்களை விலங்குகளின் மீதான காதலைக்கொண்டு நிரப்பியுள்ளார்.

சுனிதி நாராயணன்

இந்திய அரசின் அனுமதி பெற்ற முதல் பெண் சுற்றுலா வழிகாட்டி என்ற பெருமைக்கு சுனிதி என்றும் சொந்தக்காரர். 1940-ல் இந்திய சுற்றுலாத் துறை நடத்திய பயிற்சி வகுப்பில் சேர்ந்து சுனிதி படித்தார். அன்றைய காலகட்டத்தில் இசை, நடனம், கலை, வரலாறு, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றில் தேர்ந்து விளங்கிய ஆளுமைகளால் வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த வகுப்புகள் சுனிதியின் வாழ்க்கையையே மாற்றி அமைத்துவிட்டன.

குறிப்பாக, ருக்மணி தேவி, ஸ்ரீனிவாசன், வெங்கட்ராமன், ரங்கசாமி ஆகியோரின் வகுப்புகள் சுனிதியின் தேடல் வேட்கையை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளன. தன் வாழ்நாள் முழுவதும் புதுப் புது இடங்களுக்குச் சென்றதுடன் அவற்றின் வரலாற்றைத் தேடிப் பயணித்துள்ளார்.

தனக்குத் தெரிந்தவற்றைத் தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல்; சுற்றுலாப் பயணிகளுக்கும் அதைக் கடத்தியுள்ளார். சுனிதி படிக்காதவர், கல்லூரிக்குச் செல்லாதவர், நவ நாகரிக உடை அணிய தெரியாதவர். தமிழ்ப் பெண்கள் அன்று அதிகம் அணிந்த உடையைத்தான் இவர் இறுதிவரை அணிந்துள்ளார்.

இருந்தும், நியூயார்க்கில் இருக்கும் அருங்காட்சியம் ‘இந்திய கலை மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இவரைத்தான் அழைத்தது. நவராத்திரி நேரத்தில், சுற்றுலாப் பயணிகளை, மயிலாப்பூர் வீடுகளில் இருக்கும் கொலுவைப் பார்க்க அழைத்துச் செல்வார். தமிழகத்தின் குறிப்பாக சென்னையின் வரலாற்றை சுனிதியின் அளவுக்குத் தெரிந்திருந்தவர்கள் யாருமில்லை என்றால், அது மிகையல்ல.

சென்னை என்பதே பெருமைதான்

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தாரக மந்திரம். அந்தக் கூற்று இந்தியாவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சென்னைக்குக் கண்டிப்பாகப் பொருந்தும். இந்தியா எனும் நாட்டை ஒன்றாகப் பிணைத்திருக்கும் பசை சென்னை. பல மொழி பேசும் மக்கள், ஒரே மொழியில் பேசி வாழும் நகரம் சென்னை. பல இனத்தைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழும் நகரம் சென்னை. பல மதங்களைப் பின்பற்றும் மக்கள், மதராஸி என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றுபட்டு நிற்கும் நகரம் சென்னை.

இந்தியாவில் அமைதிப்பூங்காவாக இன்றும் ஒரு நகரம் இருக்கிறது என்றால், அது சென்னைதான். இன்று அங்கும் இங்குமாகச் சிறிது வன்முறை நிகழ்ந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இன்றும் சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்தான். அன்பையும் மரியாதை யையும் பொழிந்து பெண்மையை உயர்வாக மதிக்கும் நகரமே சென்னை என நாம் சற்று கெத்தாகவே சொல்லலாம்.

ஓவியம்: முத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x