அழகிய கண்ணே: டீச்சருக்கு என்னைப் பிடிக்குமா?
சித்ரா மற்ற குழந்தைகளைப் போன்றவள் அல்ல. பள்ளிக்குச் செல்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். காலையில் அம்மா எழும்போதே அவளும் எழுந்துவிடுவாள். பல் துலக்குவது, குளிப்பது, யூனிஃபார்ம் அணிந்துகொள்வது எனத் தனக்கான விஷயங்களை சித்ராவே செய்துகொள்வாள். இத்தனைக்கும் அவள் நான்காம் வகுப்புதான் படித்துக்கொண்டிருக்கிறாள். தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும்படி சிறுவயதிலிருந்தே சித்ராவை அவள் பெற்றோர் பழக்கி உள்ளனர். என்றும் போல் அன்றும் சித்ரா உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள்.
நடனத்துக்கான தேர்வு
அன்றைய மதிய உணவுக்குப் பின் சித்ரா உள்ளிட்ட சில மாணவர்களை ஆசிரியர் மைதானத்தில் உட்கார வைத்திருந்தார். எப்போதும் நான்கு சுவருக்குள் கழியும் பள்ளி நேரம் அன்று மைதானத்தில் மரத்தின் அடியில் கழிந்தது சித்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தும், ஏன் வெளியில் உள்ளோம் என்ற யோசனை அவள் மனத்தினுள் ஓடியது. ‘உங்களில் யாருக்கெல்லாம் டான்ஸ் ஆடத் தெரியும்? எனக் கேட்ட ஆசிரியரின் குரல் அவளது மன ஓட்டத்தை நிறுத்தியது.
சுதந்திர தின விழாவில் நடனமாடப் போகும் மாணவர்களைத் தேர்வு செய்யவே அவர்கள் கூட்டப்பட்டுள்ளார்கள் என்பது சித்ராவுக்கு அப்போதுதான் புரிந்தது. சித்ரா உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் தங்களுடைய கைகளை உயர்த்தியபடி ‘மிஸ்.. மிஸ்.. எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும்’ எனக் கூச்சலிட்டார்கள். ‘சரி எல்லாரும் கையைக் கீழே போடுங்க, நான் கூப்பிடுபவர்கள் மட்டும் என் பக்கத்தில் வந்து நில்லுங்க’ என்று ஆசிரியர் சொன்னார்.
நடனப் பயிற்சி
ஒவ்வொரு மாணவர்களின் பெயரைச் சொல்லி ஆசிரியர் அழைத்தார். சித்ராவுக்கு அருகில் இருந்த சுமதியும் தருணும் அழைக்கப்பட்டுவிட்டார்கள். அருகில் இருந்தவர்கள் சென்றுவிட்டதால் தனியாக இருப்பதுபோல் சித்ரா உணர்ந்தாள். அந்தத் தனிமை, எங்கே டீச்சரால் தான் அழைக்கப்படாமல் போய் விடுவோமோ என்ற அச்சமாக மாறியது. ஆசிரியர் ஒருவர் சித்ராவைக் கைகாட்டி அழைத்து அவளது அச்சத்தையும் ஏக்கத்தையும் போக்கினார்.
சித்ராவுக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஆசிரியருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த தன் நண்பர்களுடன் சித்ராவும் உற்சாகமாக நின்றாள். தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஜோடி மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் மீண்டும் வகுப்புக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மட்டும் நடனப் பயிற்சி அளிக்க அழைத்துச் செல்லப் பட்டனர்.
பாரத விலாஸ் படத்தின் ‘இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது. மாணவர்களுக்கு முதலில் ஆசிரியர் ஆடிக் காட்டினார். ஆசிரியர் ஆடுவதை வித்தியாசமாக மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சித்ராவின் ஏமாற்றம்
பின்னர், ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு ஆடவைக்கப் பட்டனர். சித்ராவின் முறை வந்தபோது அவளுக்குச் சற்று நடுக்கம் ஏற்பட்டது. பதற்றமாக இருந்த காரணத்தால் ஆசிரியர் முன்னிலையில் ஆடுவதற்கு சித்ராவுக்குக் கொஞ்சம் கூச்சமாகவும் சிரமமாகவும் இருந்தது. ‘இப்படி இடுப்பை ஆட்டு... சாதாரணமாக ஆடு’ என ஆசிரியர் சொன்னது சித்ராவின் பதற்றத்தை அதிகமாக்கிவிட்டது.
அவளால் ஆட்டத்தைத் தொடர முடியவில்லை. சித்ராவுக்கு ஆடத் தெரியாது என நினைத்த ஆசிரியர்கள் அவளை வகுப்புக்குப் போகச் சொல்லிவிட்டனர். ஆசை ஆசையாய் ஆடத் வந்த சித்ராவுக்கு நடனமாட முடியவில்லையே என்ற ஏமாற்றம் அழுகையாக மாறியது. வகுப்புக்குள் நுழைந்தபோது சக மாணவர்கள் ‘உன்ன டான்ஸ்ல சேத்துக்கிலையா’ எனக் கேட்க அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அழுகையை அடக்கியபடி அவள் அமைதியாக இருந்தாள். பள்ளி முடிந்தவுடன் வேகமாக நடந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்
ஆறுதல் அவசியம்
வீட்டுக்குள் நுழையும் போதே சித்ராவின் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. என்னவோ ஏதோ எனப் பதறிப்போன சித்ராவின் அம்மா ஓடிப்போயி ‘என்னமா ஆச்சு? ஏன்மா அழுவுற?’ எனக் கேட்டபடி வீட்டுக்குள் அழைத்து வந்தார். சித்ரா ஏதும் சொல்லாமல் விசும்பியபடியே யூனிஃபார்மைக் கழற்றினாள். முகம் கழுவினாள்.
அவளுக்கு காபியை ஆற்றிக்கொடுத்தபடியே ‘ஏன்மா செல்லம் அழுவுற, என்னமா ஆச்சு’ என அவளின் அம்மா மீண்டும் கேட்டாள். பள்ளியில் நடந்த விஷயத்தை அழுதபடியே சித்ரா சொல்லத் தொடங்கினாள். ‘நான் நல்லாதாமா ஆடுனேன். ஆனா அந்த இங்கிலிஷ் மிஸ்தான் என்னை இப்படி ஆடு, அப்படி ஆடுன்னு ரொம்ப குழப்பிட்டாங்க. அவங்க எப்பவுமே அப்படித்தான். அவங்களுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது’ என்று அழுதபடி சித்ரா கூறினாள்.
இது போன்ற சூழ்நிலையில் குழந்தைகள் தங்களுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது ‘மிஸ்ஸை எல்லாம் அப்படிப் பேசக் கூடாது. நீ ஒழுங்கா ஆடி இருந்தா நிச்சயமா அவங்க உன்னை செலக்ட் பண்ணி இருப்பாங்க, அவங்க ஆடச் சொல்லும்போது நீ சும்மா இருந்திருப்ப’ என மேலும் அவர்களைக் கஷ்டப்படுத்தும்படி குழந்தைகளிடம் பேசக் கூடாது. அவர்கள் மனத்தில் ஏற்பட்ட வருத்தம் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும்போதுதான் கொஞ்சம் சரியாகும்.
அந்த மாதிரியான நேரத்தில், குழந்தைகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு அவர்களுக்கு அந்த நேரத்துக்குத் தேவையான ஆறுதல் வார்த்தைகளைப் பெற்றோர் கூற வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் குழந்தையின் நிலையை எடுத்துக்கூற வேண்டும். குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்துவதும் தவறில்லை.
(வளர்ப்போம்,வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com
