Published : 04 Aug 2018 05:45 PM
Last Updated : 04 Aug 2018 05:45 PM

வட்டத்துக்கு வெளியே: கடவுளின் தேசத்தில் ‘காஸ்ட்லெஸ்’ குடும்பம்!

சிறு குடிலாக இருந்தாலும் அதற்குப் பெயர் வைப்பது வழக்கமாகிவிட்டது. அன்பு இல்லம், அன்னை இல்லம், தாய் வீடு என்பது போன்ற பெயர்களுக்கு மத்தியில் தங்கள் கொள்கையையே வீட்டுக்குப் பெயராக வைத்திருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.

கேரள மாநிலம் புனலூரில் இறங்கி,  ‘காஸ்ட்லெஸ் பவன்’ எனக் கேட்டால் பச்சிளம் குழந்தைகளும் பாதை காட்டுகிறார்கள். காஸ்ட்லெஸ் பவனுக்குள் நுழைந்தபோது, பஸ்லுதீனும் அவருடைய மனைவி ஆக்னஸ் கேப்ரியேலும் பேரன், பேத்திகளுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். ‘காஸ்ட்லெஸ்’ என்பது இவர்களது வீட்டின் பெயர் மட்டுமல்ல; அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை நெறியும் அதுதான்!

சாதியில்லை பேதமில்லை

“மதம் மாறி கல்யாணம் செஞ்சதால ஊர்ல இருந்தே விலக்கி வைச்சுட்டாங்க. நான் கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடிச்சதைக் கேள்விப்பட்டு எங்க வீட்டு மேல  கல்லை எறிஞ்சவங்களும் உண்டு. இன்னொரு பக்கம் என் மனைவி குடும்பத்திலும் எங்க திருமணத்துக்குக் கடுமையான எதிர்ப்பு. இந்தச் சாதியிலயும் மதத்துலயும் அப்படி என்னதான் இருக்கு?” எனத் தன் அனுபவங்களை முன்னிறுத்தி, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கட்டமைப்பு குறித்த விமர்சனத்தைப் பேச்சினூடே விதைக்கிறார் பஸ்லுதீன் அலிக்குஞ்சு.

மதம் தங்கள் காதலுக்குக் குறுக்கே நின்றதாலும் அதன் கொடூரத்தை அனுபவித்ததாலும் சாதியும் மதமும் மனித அடையாளமாவதை  பஸ்லுதீன் - ஆக்னஸ் தம்பதி வெறுத்தனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர், காஸ்ட்லெஸ். இவருடைய மனைவி சபிதா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் ஆல்பா காஸ்ட்லெஸ், இளையவன் இந்தியன் காஸ்ட்லெஸ். இவர்கள் தற்போது துபாயில் வசித்துவருகிறார்கள்.

மதங்களில் வெளிப்படும் வேற்றுமை

பஸ்லுதீன் – ஆக்னஸ் தம்பதியின் இளைய மகன், காஸ்ட்லெஸ் ஜூனியர். இவர் புனலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய மனைவி ராஜலட்சுமி  அரசுப் பணியாளராக உள்ளார்.

ஜூனியர் காஸ்ட்லெஸ்க்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ஆல்பா காஸ்ட்லெஸ் ஜூனியர், இளையவள் ஆக்னா காஸ்ட்லெஸ் ஜூனியர். இரண்டு மகன்களின் திருமணமும் சாதி, மதம் இரண்டின் மறுப்பைப் பிரதானப்படுத்திய  திருமணங்கள்தாம். தன் மகன்களுக்குச் சாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்துவைத்ததோடு மட்டும் பஸ்லுதீன் நின்றுவிடவில்லை. தன் மகள் ஷைன் காஸ்ட்லெஸ்ஸுக்கும் அதே வழியில் திருமணம் செய்துவைத்தார்.

மகளுடைய கணவர் பெயர் சே குவேரா. இவர்களின் மகளின் பெயர் அலைடா சே குவேரா. பெயர்களில் மட்டுமல்ல; இவர்களின் வீட்டிலும் சாதிக்கும் மதத்துக்கும் துளியும் இடம் இல்லை என்பதுதான் இவர்களின் திருமணம் சொல்லும் சேதி.

எப்படி இது சாத்தியமானது என பஸ்லுதீனிடம் கேட்டோம். “நான் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவன். அந்த மார்க்கத்தின் முறைப்படிதான்  வளர்க்கப்பட்டேன். நாட்கள் செல்லச் செல்ல நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் மதத்தை முன்னிறுத்திப் போதிக்கப்படுகையில் பேசுவது ஒன்றாகவும் செய்வது  வேறாகவும் இருப்பதாகத் தோன்றியது. இதை அனைத்து மதங்களிலும் உணர்ந்தேன்” என்று சொல்லும் பஸ்லுதீன், மெல்ல மெல்ல மதங்களை விலக்கி வைத்துவிட்டு மானுடச் சிந்தனையை வளர்த்துக்கொண்டார்.

தலைமுறை கடந்த பயணம்

அந்நேரத்தில்தான் இவருக்கு ஆக்னஸ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆக்னஸ், கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒன்பது ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டுக்கும் தெரியவரவே பிரச்சினை வெடித்தது. ஆக்னஸை வீட்டுச் சிறையில் வைத்தனர். மதம் தன் கோரப்பற்களை வெளிக்காட்டியது. உறவினர்கள் மதத்தைக் காரணம் காட்டி இருவரையும் பிரிக்க முயன்றனர்.

கடைசியில் ஆக்னஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனுவை பஸ்லுதீன் தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆக்னஸ், பஸ்லுதீனுடன் வாழ விரும்புவதாகச் சொன்னார். எந்த மதத்தின் வழக்கத்தைப் பின்பற்றியும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவுசெய்தனர்.

“எங்க மூணு பிள்ளைகளுக்கு நடந்த திருமணங்களைக்கூட மதச் சடங்குகள் இல்லாமல்தான் நடத்தினோம். சார்பதிவாளரே மண்டபத்துக்கு வந்து திருமணத்தைப் பதிவு  செய்தார். எங்கள் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையின்  போது மதமும் சாதியும் கேட்டனர். இரண்டிலும் இல்லை என்றே பூர்த்தி செய்தோம். இப்போது பேரக் குழந்தைகளுக்கும் சாதியும் மதமும் இல்லை என்றுதான் பதிவுசெய்திருக்கிறோம். பாடத்தில், ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’ எனச் சொல்லிக்கொடுத்துவிட்டு, மாணவர் சேர்க்கையிலேயே சாதியையும் மதத்தையும் கேட்பதே பெரிய முரண்தானே!” எனக் கேட்கிறார் பஸ்லுதீன்.

ஒற்றுமையை உணர்த்தும் பண்டிகைகள்

கணவர் சொல்வதைப் பார்வையால் ஆமோதித்த ஆக்னஸ், “சாதியும் மதமும் இல்லை என்பதே எங்கள் குடும்பத்தின் அடையாளமாகிவிட்டது. விலகி நின்ற உறவுகளும் இப்போது கைகோத்துவிட்டனர். எங்கள் கொள்கையில் நாங்களும் அவர்கள் நம்பிக்கையில் அவர்களுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதேநேரம் எங்கள் வீட்டில் மூன்று மதங்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்.

ஓணத்தின்போது அத்தப்பூ கோலம் போடுவோம்; கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் வீட்டில் ஸ்டார் கட்டுவோம்; ரம்ஜானுக்கு பிரியாணி சமைப்போம். பண்டிகைகள்  சாப்பிட்டு மகிழத்தான் வருகின்றன. எதற்கு மதம் பார்த்து அவற்றை விலக்கி வைக்க வேண்டும்? எங்கள் வீட்டைப் பொறுத்தவரை மனுசங்க எல்லாரும் ஒண்ணுதான்” என்று சொல்லும். ஆக்னஸ், புனலூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்.

தங்கள் வாழ்க்கையையே சமூக மாற்றத்துக்கான விதையாகத் தூவியிருக்கும் ‘காஸ்ட்லெஸ் பவன்’ குடும்பத்தினர், சமூகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x