என் பாதையில்: நம்பிக்கையோடு நகரும் நாட்கள்

என் பாதையில்: நம்பிக்கையோடு நகரும் நாட்கள்
Updated on
2 min read

கடந்து வந்த பாதைகளில் உள்ள வேதனைகளும் கசப்பான அனுபவங்களும் என் மனத்தில் ஆறாத வடுக்களாக உள்ளன. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் கணக்கில் அடங்காதவை. நான் பயணித்த பாதை முழுவதும் வறட்சியும் வேதனைச் செடிகளும் நிறைந்து கிடக்கின்றன.

மகிழ்ச்சியான முகத்துடனும் உற்சாகத்துடனும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மத்தியில் பயத்தையும் பதற்றத்தையும் மனத்தில் வைத்துக்கொண்டு புறப்படுவேன். மதுவுக்கு அடிமையான பொறுப்பற்ற தந்தை வீட்டில் என்ன பிரச்சினை செய்யப்  போகிறாரோ?’ அம்மா பாவம் தனியாக இருக்கிறார்களே என்று எண்ணியபடி வெளியில் காட்டிக் கொள்ளாமல் பள்ளிக்குச் சென்ற பெண் நான். பள்ளி முடிந்ததும் விளையாடலாம் வா என்று அழைக்கும் என் தோழிகளிடம்  ‘இல்லை எனக்கு வேலை இருக்கிறது’ என்று பொய் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஒடி வருவேன்.

அம்மாவின் முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா, அப்பா அடித்துவிட்டாரோ' என்று ஆராயும் அபலைப் பெண்ணாகக் கடந்து சென்றது என் பள்ளிப் பருவம். பள்ளி முடிந்ததும் என் தோழிகளின் தந்தைகள் தம் பிள்ளைகளுக்காகப் பள்ளி வாசலில்  காத்துக்கொண்டிருப்பார்கள். நான் மட்டும் ஏக்கத்துடன் பேருந்து வரும் சாலையை பார்த்துக்கொண்டிருப்பேன். எப்படியும் என் மகள் வீட்டுக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அம்மா காத்துக்கொண்டிருப்பார்.

தந்தையின் வீண் உளறல்கள், தாயின் அழுகுரல்களுக்கு மத்தியில் நான் படித்தே ஆக வேண்டும் என்ற மன உறுதி என்னிடம் இருந்தது. உணவு இல்லாமல் கடந்த இரவுகள் பல. காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்லவிடாமல் சண்டைபோடும் என் தந்தையுடன் போராடி என் அழுகையை மறைத்து கட்டாயச் சிரிப்பை முகத்தில் வரவழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்ற நாட்கள் ஏராளம்.

மாதம் ஒருமுறை என் பள்ளியில் நடக்கும் பெற்றோர் சந்திப்பில் பெரும்பாலும் அப்பாக்கள்தாம் கலந்துகொண்டிருப்பார்கள். ஆனால், அத்தனை ஆண்கள் மத்தியில் தைரியமான

ஒரு பெண்ணாக என் அம்மா அமர்ந்து இருப்பார். என் வகுப்பு ஆசிரியை என் அம்மாவிடம் ‘‘உங்கள் மகள்தான் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள், வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்துக்கு வரப்போகிறாள். அனைவரிடமும் பண்பாக நடந்துகொள்கிறாள்’’ எனக் கூறும்போது அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும். வீட்டு நிலைமையை நினைத்து எத்தனையோ முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் ‘நீ சாதிக்கப் பிறந்தவள்’ என சித்தப்பா சொன்னது நினைவுக்கு வரும். தந்தையின் பொறுப்பில் எனக்கான விஷயங்களை எல்லாம் செய்தவர் என் சித்தப்பாதான். இத்தனை இக்கட்டான சூழ்நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டேன். முதுகலைப் படிப்பில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.

அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அயராமல் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதிலும் நான் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கை என்னிடம் உள்ளது. மனவலிமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் அனைத்துத் தடைகளையும் கடந்து பெண்களால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

- அ. சங்கீதா, கோவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in