

மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டாலும் பெயரளவுக்குக்கூடப் பெண்களுக்கு வாய்ப்பளிக்க அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கு 2,357 ஆண்களும் 258 பெண்களும் போட்டியிடுகின்றனர். பிஹாரில் மொத்தமுள்ள 7.45 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 50% வாக்காளர்கள் (3.51 கோடி) பெண்கள். எண்ணிக்கை அடிப்படையிலான பிரதிநிதித்துவப்படி போட்டியிட்டால் கிட்டத்தட்ட 1,200 பெண்கள் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், 9% பெண்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கையாள்வதைக் காட்டுகிறது.
பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிற நிலையில் அவர்களின் வெற்றி சதவீதமும் குறைவாக இருக்கிறது. 2020 பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 370 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் 26 பேர் மட்டுமே வெற்றிபெற்றனர். 302 பெண்கள் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் சட்டமன்றத்துக்குத் தேர்வான பெண்களின் எண்ணிக்கை ஒருமுறைகூட 50ஐத் தொடவில்லை.