

அமெரிக்க ஒளிப்படப் பத்திரிகையாளர் லின்சே அடாரியோ. பெண்களையும் குழந்தைகளையும் போர்முனைக்கு அனுப்பக் கூடாது என்கிற மனிதநேயச் சிந்தனைகள் எல்லாம் மரத்துப்போய் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போர்களில் பெண்களும் குழந்தைகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் இந்தக் காலத்தில் போர்முனைக் காட்சிகளைப் படமெடுப்பதுதான் லின்சேவின் பணி. ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ்களுக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றிவருகிறார். ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, லெபனான், தெற்கு சூடான், சோமாலியா, காங்கோ குடியரசு, ஏமன், சிரியா எனப் பல நாடுகள் தொடங்கி தற்போதைய உக்ரைன் போர்வரைக்கும் லின்சே படமெடுத்திருக்கிறார்.
தனது பணிகளுக்காகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளான லின்சே, போர்களைப் படமெடுத்ததற்காக இரண்டு முறை கடத்தப்பட்டிருக்கிறார். 2015இல் ‘அமெரிக்கன் ஃபோட்டோ மேகசின்’, லின்சேவைக் கடந்த 25 ஆண்டுகளில் தாக்கம் செலுத்திய ஐந்து பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. போர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை லின்சேவின் படங்கள் உணர்த்தியதாக அது குறிப்பிட்டது. மெக்ஆர்தர் ஃபெல்லோஷிப், ஆப்கானிஸ்தான் போரைப் படமெடுத்ததற்காக புலிட்சர் விருது என ஏராளமான அங்கீகாரங்களை இவர் பெற்றிருக்கிறார்.