மனதைக் காலியாக வைத்திருப்போம் | சேர்ந்தே சிந்திப்போம் 2
ஒருகாலத்தில் மேம்பட்ட நிலையில் இருந்த பெண்களுக்குக் காலப்போக்கில் பல விஷயங்கள் மறுக்கப்பட்டு அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டது கொடுமை. மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணை அசிங்கப்படுத்தினார்கள். குழந்தைப் பிறப்புக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்கு அறிகுறியாக இருக்கும் விஷயம் அசிங்கப்படுத்தப்பட்டு, கொச்சைப்படுத்தப்பட்டது. ஒரு பெண் கணவனை இழந்தபோது அபசகுனம் என்று கருதப்பட்டாள். அவள் உணர்ச்சியே இல்லாத ஜடம் என்கிற அளவுக்கு ஒதுக்கப்பட்டுவந்தது நிஜம்.
பொதுவாக, ‘பொம்பளை சிரிச்சா போச்சு. புகையிலை விரிச்சா போச்சு’ என்று சொல்வார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். சிரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? முகத்தைச் சுருக்கிக்கொண்டு சிடுசிடுவென்று இருந்தால் சிடுமூஞ்சி என்றுதானே சொல்வோம்? அப்படி இருக்க, ஏன் பெண்கள் சிரிக்கக் கூடாது? பெண்கள் அதிர நடக்கக் கூடாது, விளையாடக் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கேட்கிறபோது நீலவானத்தில் அழகாகச் சிறகு விரித்துப் பறக்கும் அற்புதமான பறவையைப் பிடித்து அதன் இறக்கைகளை முறித்து உட்காரவைப்பதைப் போலத் தோன்றுகிறது. இவையெல்லாம் மூளைச்சலவை என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடிக்கப் பட்டுவந்த காலக்கட்டம் இருந்தது உண்மை. இன்னும் பல இடங்களில் இருப்பதும் உண்மை. ஆனால், இதையெல்லாம் நாம் கடந்து வருவதும் உண்மை.
