

பெண்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் காலம் காலமாகச் சொல்லப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வருபவை ‘பாலின பிம்பப்படுத்துதல்’ என்கிற நடைமுறைக்குப் பலரையும் தள்ளிவிடுகின்றன. ஆங்கிலத்தில், ‘ஜெண்டர் ஸ்டீரியோடைப்பிங்’ என்று சொல்லப்படும் இந்த விஷயம் பெண்களைப் பலவிதங்களில் பாதிக்கிறது. நம்மில் பலரும் நம்மை அறியாமலே இந்தப் பாலின பிம்பப்படுத்துதலைச் செயல்படுத்துகிறோம்.
பலரும் நினைப்பதுபோல் இது சாதாரண விஷயமல்ல. உதாரணமாக, வேலைக்குச் செல்லும் பெண் தன் அலுவலக வேலை காரணமாக நேரம் இல்லாவிட்டாலும் அவர்தான் வீட்டுப் பணிகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற கருத்து, பிம்பப்படுத்துதலில் ஒரு வகை. இதனால், அவருக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வு கிடைக்காததுடன் ‘கடமை தவறிய மனைவி’ என்கிற அவப்பெயரும் கிடைக்கும். தன் வீட்டுக்குள்ளேயே எதிர்மறையான சூழலும் குற்றமனப்பான்மையும் அவருக்கு ஏற்படும்.