

என் சிறு வயதில் அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் சமையலறையிலேயே அவரது நாள்கள் கழிந்துவிடுவதைப் போல் இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வந்ததுமே, அம்மாவுக்கு உதவத் தொடங்கினேன். அவர் சமைத்து முடித்ததும் பாத்திரங்களை ஒதுக்கிவைத்து, சமையல் மேடையைத் துடைப்பேன். அந்தச் சிறு உதவியே அம்மாவுக்குப் பெரும் ஆசுவாசத்தை அளித்தது. ‘வீட்டுவேலை என்பது பெண்களின் வேலை அல்ல; அதுவொரு குடும்பப் பொறுப்பு’ என்பது புரிந்தபோது என் பங்களிப்பை அதிகமாக்கினேன். திருமணத்துக்குப் பிறகும் அதைத் தொடர்கிறேன். காலையில் காபி போடுவதில் தொடங்கிக் காய்கறிகளை நறுக்குவது, தோசை சுடுவது, சப்பாத்திக்கு மாவு பிசைவது, துணி துவைத்து உலர்த்துவது, மகளைப் பள்ளிக்குக் கிளப்புவது என என்னால் முடிந்த வேலைகளை விரும்பிச் செய்வேன். நான் வைக்கிற தக்காளித் தொக்கு என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், மாதத்தில் இரண்டு நாட்களாவது அதைச் செய்வேன்.
வெங்காயம் சேர்க்காமல் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கரம் மசாலா, பிரியாணி மசாலாவை லேசாகத் தூவிப் பதமாகக் கிளறி, எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கிவிட வேண்டும். முறுகலாகத் தோசை சுட்டு அதன் மேலே சிறிது நெய்யை ஊற்றி, இந்தத் தக்காளித் தொக்கைத் தொட்டுக்கொண்டு என் மனைவி சாப்பிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகளுக்காக ஞாயிறுகளில் பிரியாணியும் சமைப்பேன். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது மட்டுமல்ல, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதும் அன்புதான்.- பிரகாஷ், சென்னை.