பெண் இன்று
அகிலன் என்ன சொன்னார்? | வாசிப்பை நேசிப்போம்
என் அப்பா ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தினமனி, மஞ்சரி, சோவியத் ரஷ்யா போன்ற இதழ்களை வாசிப்பார். என் வாசிப்புப் பழக்கம் அப்பாவிடம் இருந்துதான் தொடங்கியது. முதலில் பெரிய எழுத்தாக உள்ள தலைப்புச் செய்திகளை மட்டும் வாசித்தேன். பிறகு ‘அம்புலிமாமா’ உள்ளிட்ட சிறார் இதழ்களை வாசித்தேன். பள்ளி நாட்களில் இறைவணக்கத்தின்போது நாளிதழ் செய்திகளைத் தேர்ந்தெடுத்து வாசிக்க என் தமிழாசிரியர் உதவினார்.
வார இதழ்களில் வந்த சிறுகதை, தொடர்கதைகளை வாசித்தபோது எழுத்தாளர்களின் நடையை அறிந்துகொண்டேன். குறிப்பாக,சுஜாதாவின் நாவல்கள், கட்டுரைகள். அவருடைய அறிவியல் புனைகதைகள் புதுமையாக இருந்தன.
