

இன்ஸ்டகிராம் ரீல்களும் சின்னத்திரை நெடுந்தொடர்களும் பல பெண்களின் நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்க, திருநெல்வேலியைச் சேர்ந்த சத்யா கோமணியோ இன்ஸ்டகிராம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்திருக்கிறார்!
பாபநாசம் அருகில் உள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த சத்யா, பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பணி ஒப்பந்தம் முடிந்ததும் ஊருக்குத் திரும்பியவர், அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றினார். பத்து ஆண்டுகளாகக் காதலித்துவந்த கோமணியை இருவீட்டினர் சம்மதத்துடன் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு மதுரைக்குக் குடியேறிய சத்யாவுக்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை.