

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றதுடன் தன் தாயையும் கொன்ற தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்ததோடு போதுமான ஆதாரங்களைக் காவல் துறை சமர்ப்பிக்கவில்லை என்கிற காரணத்தை முன்வைத்து அவரை விடுதலையும் செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 2017இல் சிறுமியைக் கொன்ற வழக்கில் 2018 பிப்ரவரி 19 அன்று தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2018 ஜூலை 10 அன்று இந்தத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இதைத்தான் உச்ச நீதிமன்றம் தற்போது ரத்து செய்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்றங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என்கிற உச்ச நீதிமன்றத்தின் கருத்தும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீதிமன்றங்கள் பாலினப் பாகுபாடு இல்லாமலும் நுண்ணுணர்வோடும் அணுக வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குற்றமிழைத்துவிட்டு ஆதாரங்களை அழித்துவிட்டால் தண்டனையிலிருந்து எளிதில் தப்பிவிடலாம் என்கிற தவறான எண்ணத்தை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்திவிடக்கூடிய அபாயம் இருப்பதையும் பெண்ணிய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணையிலும் தீர்ப்பு வழங்கும் அமைப்பிலும் கட்டாயமாகப் பெண்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.