

சில நல்ல சிந்தனைகளை, வாழ்க்கையில் நமக்கு உதவும் சிந்தனைகளைப்பற்றி இந்தத் தொடர் மூலம் பேசுவது அவசியம். யாருக்கும் தெரியாத விஷயத்தை நான் சொல்லப்போவதில்லை. ஆனால், நமக்கு நன்றாகத் தெரிந்ததை அடிக்கடி நினைவூட்டிக்கொள்வது அவசியம். பெண்கள் எப்படி இருந்தார்கள், இப்போது எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பற்றி நாம் தெளிவாகச் சிந்தித்தால்தான் நாம் போகிற பாதை சரியா, நம் இலக்கு சரியா, இலக்கிலிருந்து விலகாமல் இருக்கிறோமா என்பது தெரியும்.
20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசினேன். பெண்களுக்கு அரசியலில் 33% இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். இதுவே 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தரங்கு நடைபெற்றி ருந்தால், 'பெண்களுக்குக் கல்வி அவசியமா இல்லையா? என்பது தலைப்பாக இருந்திருக்கும். 40 ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால், 'பெண்கள் வேலைக்குப் போகலாமா கூடாதா' என்பது தலைப்பாக இருந்திருக்கும். பெண்கள் எங்கே இருந்து பயணப்பட்டு இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.