

ஆதிகாலம் தொட்டு நிகழ்காலம்வரை பெண்கள் என்றைக்குமே ஆக்கும் சக்திகள்தான் என்பதற்கு ‘பிரயாஸ் அறக்கட்டளை’யும் ஒரு சான்று. சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்குக் கல்வியும் மருத்துவ உதவியும் அளிக்கும் இந்த அறக்கட்டளை, முழுக்க முழுக்கப் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. ‘முயற்சி’ என்கிற பொருள்படும்படியான இந்த அமைப்பை, எல்&டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனைவிகளும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இணைந்து நடத்துகின்றனர். 1996இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இந்தியா முழுவதும் 17 கிளைகள் இருக்கின்றன. 3,000க்கும் அதிகமான பெண்கள் இதன் உறுப்பினர்கள்.
வளமான சமூகத்துக்கான அடிப்படைக் காரணிகளான மருத்துவம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், இளையோருக்கான திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு உதவுவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கம். கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் துடிப்பான பெண்களால் சூரியகுமாரி ராமகிருஷ்ணா என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்ட அமைப்பு இது. சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் பிரயாஸ் மருத்துவ மையத்தில் பல்வேறு தரப்பினரும் சிகிச்சை பெறுகிறார்கள். எண்ணூரை அடுத்த குப்பத்திலும் கோயம்புத்தூரிலும் மருத்துவ மையங்கள் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன் பத்து ரூபாயாக இருந்த பதிவுக் கட்டணம் தற்போது 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சாதாரண சிகிச்சை தொடங்கி டயாலிசிஸ் சிகிச்சை வரை மேற்கொள்ளப்படுகிறது. 13 சிறப்புச் சிகிச்சை நிபுணர்கள் இங்கே பணியாற்றுகிறார்கள். தினமும் 500 பேருக்குக் குறையாமல் இங்கே சிகிச்சை பெறுகிறார்கள்.