

பள்ளி செல்லும் நாள்களில் எதிர் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். பின்னே, அங்கே இருப்பது ‘ஆல் இன் ஆல்’ அழகம்மா ஆச்சியாச்சே. பிறந்த குழந்தைகளுக்குப் பக்குவமாகப் பாட்டி வைத்தியம் சொல்வார். மாதவிடாய் வயிற்று வலிக்கும் வைத்தியம் சொல்வார். மெனோபாஸ் நாள்களில் சிரமப்படும் பெண்களுக்கு, அதிலிருந்து விடுதலை பெறவும் வழி சொல்வார்.
நான்கு வெள்ளைப் புடவைகள் மட்டுமே அவரது சொத்து. இரண்டு புடவைகளை வெளுக்கப் போட்டுவிட்டு, மீதி இரண்டு புடவைகளை மாற்றி மாற்றிக் கட்டிக்கொள்வார். இப்போது பீரோ முழுவதும் புடவைகள் நிரம்பியிருந்தாலும், நமக்குத் திருப்தி வருவதில்லை. அவரது வாசமோ திண்ணையில்தான். மகன், மருமகளுடன் இணைக்கமாகப் போய்விடுவதால் மாமியார் - மருமகள் பிரச்சினைக்கு வழியில்லை.
பழமொழிகள் பலவும் ஆச்சிக்கு அத்துப்படி. பேசிக்கொண்டிருக்கும் போதே, பொருத்தமான பழமொழிகளைப் போகிற போக்கில் சொல்வார். அவர் அடிக்கடி சொல்லும், ‘கண் அளக்காததையா கை அளக்கும்?’ என்கிற பழமொழி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை கோலப்பொடி வாங்கும்போது விற்பவர் உழக்கில் உள்ள பொடியைச் சிறிது வைத்துக்கொண்டே மீண்டும் மீண்டும் அளந்திருக்கிறார். ஆச்சி, கண்களுக்கு அது தப்புமா என்ன? திருப்பி அளக்கச் சொன்னதில், ஓர் உழக்குக் கோலப்பொடி குறைய, “என்னப்பா..எங்கண் அளக்காததையா உங்கை அளக்கும்?” என்று கேட்க, அவரோ கொசுறாக ஒரு கைப்பிடி போட, வேண்டாம் என ஆச்சி மறுத்துவிட்டார்.