

பெண்களில் பலர் இன்று வேலைக்குச் சென்றாலும், பல ஆண்களின் பார்வையில் அவர்கள் இன்னமும் ‘பொன் முட்டையிடும் வாத்து’தான். உழைக்கும் பெண்கள் தங்கள் வருமானத்தைக் குடும்பத்துக்குக் கொடுத்தாலும், தாங்கள் சம்பாதித்த பணத்தைச் செலவிடும் சுதந்திரம் மிகவும் குறைவு. நானும்கூடப் பலமுறை ‘ஏ.டி.எம். இயந்திரம்’ போலவே கருதப்பட்டிருக்கிறேன். என்னுடைய உழைப்பால் வந்த வருமானத்தை, எப்படிச் செலவிடுவது என்பதைப் பெரும்பாலும் வீட்டின் ஆண்தான் முடிவுசெய்கிறார்.
பெண்களின் வருமானத்தை இன்னமும் ‘கூடுதல் வருமானம்’ என்றே பலர் பார்க்கிறார்கள். வீட்டுச் செலவுகள், பிள்ளைகளின் கல்வி, பொதுவான குடும்பச் செலவுகள் என அனைத்தும் அதில் இருந்தே நடந்தாலும், எனக்காகச் செலவிடும்போது நான் குற்றவுணர்வுக்கு ஆளாகிறேன். ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்கிற அந்தக் காலக் கூற்று, இன்னமும் பெண்களை நிதி விஷயங்களில் சுருக்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு பெண் அவளுக்காகச் செலவு செய்யக் கூடாது, அவளது ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் குடும்பத்தினர், குறிப்பாகக் குடும்பத் தலைவரான ஆண் எதிர்பார்க்கிறார்.
எனக்கு முதலில் மகளும் பிறகு மகனும் பிறந்தனர். சமீபத்தில் நலம் விசாரிக்க வந்த உறவினர் ஒருவர், ‘முதல்ல பிறந்தது செலவு, இரண்டாவதாகப் பிறந்தது வரவு’ என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். அந்த வார்த்தை என்னை உள்ளுக்குள் தூக்கி எறிந்ததுபோல் இருந்தது. இன்றும் பெண் குழந்தையைச் செலவுக் கணக்கிலும் ஆண் குழந்தையைச் சேமிப்புக் கணக்கிலும்தான் சமூகம் பார்க்கிறது என்பதை மன வலியோடு உணர்ந்தேன்.