

நான் ஓர் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். சிறு வயது முதலே வாசிப்பின் மீது அளவற்ற ஆர்வமும் ஈடுபாடும் பற்றும் எனக்கு உண்டு. கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாசித்து முடிக்கவேண்டும் என்கிற எண்ணம் என்னை மேலும்மேலும் வாசிக்கத் தூண்டும். என்னுடைய கணவரும் வாசிப்பின் மீது அளவற்ற ஈடுபாடும் பற்றும் கொண்டவர் என்பது, வாசிப்பின் மீது கூடுதல் ஆர்வத்தை உருவாக்கிவிட்டது.
அண்மையில், ‘இக்கிகய்’ என்கிற ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலைப் படித்தேன் ஒருவருடைய ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களைச் செயல்படுத்துவதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை இந்த நூலின் மூலம் அறிந்துகொண்டேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘இக்கிகய்’ (வாழ்க்கையின் நோக்கம்) இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தவும் செயல்படுத்தவும் பயிற்சிகள் தேவை. பரபரப்பான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கும் நாம் அனைவரும் நம்முடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக ஏதோவொரு வகையில் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம்.