

இது இந்தக் கட்டுரைத் தொடரின் நிறைவுப் பகுதி. 49 வாரங்கள் என் மனதில் இருந்த அவ்வளவு கொந்தளிப்புகளையும் உங்களோடு உரையாட முடிந்ததைப் பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன். சிறுவயதிலிருந்தே என்னுடைய கருத்துக்களை நான் சொல்ல முன்வரும் போதெல்லாம் என்னுடைய அம்மா அதற்குத் தடை போடுவார். ‘சின்ன பிள்ளைக்குச் சொல்ல என்ன இருக்கு?’ என்று என் உரையாடலை அப்படியே கத்தரித்துவிடுவார். அது எனக்குள் தீவிரமான தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருந்தது. என்னுடைய கருத்துக்கள் யாருக்கும் தேவை யற்றவை என்கிற மனநிலையில் யார் எதைப் பற்றிக் கேட்டாலும் - நான் வளர்ந்த பிறகும் -சொல்வதற்கு மிகவும் தயங்குவேன். அந்த மனக் கொந்தளிப்புகளைத்தான் நான் சிறுகதைகளாக மாற்றியிருக்கிறேன்.
நாம் தனி அல்ல அதனாலேயே எனக்கு யாருடனாவது உரையாடப் பிடிக்கும். அவர்களது மனதின் கரங்களை நான் பற்றிக்கொள்வது போல அப்போது உணர்வேன். அந்த உணர்வு, ‘நான் தனியாக இல்லை’ என்கிற மாபெரும் பலத்தை எனக்குப் பல நேரத்தில் கொடுத்திருக்கிறது. எழுத்து மூலம் நிகழக்கூடிய உரையாடல் வாழ்நாள் முழுவதும் உடன் வரும் பல உறவுகளை எனக்குத் தந்திருக்கிறது. அதன் ஒரு பரிமாணம்தான் இந்தக் கட்டுரைத் தொடர். ‘உரையாடும் மழைத்துளி’ என்பது பெரும் மனசஞ்சலங்களோடு தனியாகச் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது நம் மீது தூவுகின்ற மழைத் துளிகளின் உரையாடலைக் குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட ஒரு தலைப்பு.