

‘எனக்குத் தாய், தந்தை எல்லாமே என் அம்மா கலாவதிதான்’ – எனது வாழ்க்கையை நினைவுகூரும்போது என் மனதில் தோன்றும் சொற்கள் இவைதான். எனக்கு 13 வயதானபோது தந்தையை இழந்தேன். அந்தத் தருணத்திலிருந்து வெளி உலகை எதிர்கொள்ளும் பொறுப்பு என் அம்மாவின் தோள்களில் விழுந்தது. அம்மா, கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர். கணவனை மட்டுமே நம்பியிருந்த வாழ்க்கை, ஒரே இரவில் மாறியது. ஆனாலும், தளராமல் தன் பிள்ளைகளுக்காகத் துணிவுடன் போராடத் தொடங்கினார்.
பெரிய படிப்பு இல்லாமல், வைராக்கியத்தை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு எங்களை வளர்த்தார். எங்களைப் படிக்க வைப்பதற்காக எளிய வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தினார். நான் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் உறவினர்கள், “ஒரு வருடம் வீட்டில் வைத்திருந்து பிறகு திருமணம் செய்து விடுங்கள்” எனக் கூறினார்கள். ஆனால் என் அம்மாவோ, “படிக்கிற பிள்ளை படிக்கட்டும்” என்று உறுதியாக நின்றார். அதன் பலனாக, நான் இளங்கலை கணிதம் பயின்றேன். பின்னர் நான் போட்டித் தேர்வுக்குத் தயாரானபோதும், தோல்வி அச்சமின்றித் தொடர்ந்து ஊக்கம் அளித்தார் அம்மா. இறுதியில், வெற்றியுடன் வேலைவாய்ப்பைப் பெற்றேன்.