

பெண்கள் எழுதிய அனைத்தும் ஆப்கானிஸ்தான் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தாலிபான் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. பெண்கள் எழுதிய 679 தலைப்புகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்கள் அனைத்தும் மனித உரிமைகள், பெண்ணுரிமைகள், அயல்நாட்டு அரசியல் கொள்கைகள், அரசமைப்புச் சட்டம், இஸ்லாமிய அரசியல் குழுக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டவை. இவை இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கு எதிராக இருப்பதால் இவற்றை நீக்குவதாகப் பாடத்திட்ட ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மத அறிஞர்களும் நிபுணர்களும் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்குப் பதிலாகச் சேர்க்கப்படும் பாடங்கள், இஸ்லாமியச் சட்டத்துக்கு எதிராக இருக்கக் கூடாது எனவும் ஆப்கானிஸ்தானின் உயர் கல்வித் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆப்கனில் தாலிபான் தலைமையிலான அரசு அமைந்தபோது 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது என எந்த இஸ்லாமியச் சட்டத்திலும் வலியுறுத்தப்படவில்லை. பெண் கல்வியாளர்களையும் எழுத்தாளர்களையும் கொண்ட மரபு இஸ்லாமியர் களுக்கு உண்டு. உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தை மொராக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவியர் ஒரு இஸ்லாமியப் பெண்தான். ஆனால், தாலிபான்கள் மதச் சட்டங்களைக் காரணம்காட்டிப் பெண்களை ஒடுக்குவதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.