

நம் சமூகத்தில் பெண்கள் விளையாடுவது என்பதே மிக அரிதான விஷயம். அவர்களது வீடுகளில் அதை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. ஒரு பெண்ணைப் பூப்போல வளர்க்க வேண்டும் என்பதே தலையாய பொறுப்பாகவும் கடமையாகவும் பல குடும்பங்களில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட குடும்பங்களில் இருந்து வரக்கூடிய பெண்கள் மாலை நேரம் மைதானங்களில் விளையாடுவது என்பது மிக மிக அரிதான நிகழ்வு. அதுவும் வெயிலில் விளையாடும்போது அவர்களின் தோல் கருத்துப்போவதை அவர்களது குடும்பம் ஏற்றுக்கொள்ளாது.
குடும்பத்தினரின் கட்டுப்பாட்டையும் மீறி விளையாட்டின் மீதுள்ள பெரும் ஈர்ப்பினாலும் காதலினாலும் அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும்போது அவர்களது குடும்பத்தில் எப்போதும் ஒருவிதமான பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். ஆர்வத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களின் உடல் அமைப்பு மெல்ல மெல்ல ஆண் தன்மை கொண்டதாக மாறுவதாக அவர்களது குடும்பத்தினர் கவலைப்படுவார்கள். தசை முறுக்கேறுவதை ஆண் தன்மை என்று அடையாளப்படுத்தும் சமூகம் இது. அப்படியே தப்பித் தவறி சில பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக வலம்வந்தால்கூட அது திருமணத்துக்கு முன்பு மட்டுமே. திருமணத்துக்குப் பிறகு அவர்கள் வாய்ச்சொல்லில்கூட வீரர்களாக இல்லாமல் ஆகிப்போன கதைகளும் நம்மிடையே உண்டு.