

‘காட்டுக்குட்டி’ நாவல் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சூழலை, அவர்களை இச்சமூகம் எவ்வாறு உருவாக்குகிறது, எந்த அளவுக்குப் பாவிப் பட்டியலில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதை வைத்து 2017இல் நான் எழுதியது. இந்நாவல் வெளிவந்தபோது, ‘இது அவள் அனுபவம்’ என்கிற ஒற்றை வரியால் நான் தாக்கப்பட்டது வெகுவான அதிர்ச்சியைத் தந்தது. ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற பிரிவினைகளில் நிற்பதை நானும் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால், ஆண்களின் எழுத்துக்கு வைக்கப்படாத விமர்சனத்தைப் பெண் எழுத்துக்கு வைத்துவிடுகிறார்கள். ஆண்கள் மட்டும் மெஞ்ஞானத் தூண்டலில் எழுதுவது போன்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கையிலிருந்து மட்டும் எழுதுவது போன்றும் ஒரு அடையாளப்படுத்தலைப் பொதுவாக வைத்துவிடுகிறார்கள்.
ஞானத்தின் கண்கள் பெண் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. சக உயிர்களைத் தன் உயிர் போலவும் சக மனிதர்களின் துன்பத்தை, போராட்டங்களை, வாழ்க்கையின் இடுக்கண்களைத் தன் வாழ்க்கை போலவும் பாவிக்கும் உயிர் நேயம் இருக்கிறது. ஆனால், பெண்கள் எழுதுவதை எல்லாம் ‘இது சொந்த அனுபவம்’ என்கிற ஒரு பின்னடைவுக்குள் போட்டுவிடுகிறார்கள். அதற்காகத் துயரப்பட்டு எழுத்தைச் சுருக்கிக்கொள்ள முடியாது அல்லவா! எனது ‘தூப்புக்காரி’ நாவல் வெளிவந்த காலக்கட்டத்தில் அதன் மீதான விமர்சனங்கள் அதிக அளவில் பேசப்பட்டபோது மெத்தப்படித்த ஒருவர் வீடு தேடி வந்தார். “உண்மையாகவே அந்த நாவலை நீங்கதான் எழுதினீங்களா இல்ல வேற யாராவது...” என்று இழுத்தவர் நான் எழுதிய கையெழுத்துப் பிரதியைப் பார்க்காமல் நகரவே இல்லை.