

என் வாழ்க்கையில் மறக்க முடியாத பெண்மணி என் மாமியார் என்றால் பலரும் ஆச்சரியப்படக்கூடும். நான் ராஜபாளையத்தைச் சேர்ந்தவள். என் இரண்டாவது தாய்வீடாக பணகுடி, தளவாய்புரத்தை மாற்றியவர் என் மாமியார் சுந்தரி. பொங்கல், தீபாவளிக்குத் துணி எடுக்க என் மாமனாரிடம் இருந்து பணத்தை வாங்கி, மூத்த மருமகளான என்னிடம் கொடுத்து, பட்டியல் போட்டு, ஆளாளுக்கு நிதி ஒதுக்கி ஒரு நிதி அமைச்சர்போலச் செயல்படுவார். நிறம் சரியில்லை, ஒதுக்கிய நிதிக்குள் முடிக்கவில்லை என்கிற விமர்சனம் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர். வீட்டில் உள்ள அனைவருக்கும் அவரவர் சக்திக்கேற்ப வேலை பங்கீடு செய்வதில் நிபுணர்.
வேலைகளை முடித்த பின்னர் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து சிறுமி போல் தாயக்கட்டம் ஆடுவதோடு, விருத்தங்களாகப் போட்டுக் காய்களைக் கொத்தி ஆட்ட நாயகியாக ஜொலிப்பார். வெயிலில் வீடு தேடி வரும் தபால்காரருக்கு மோரோ நீராகாரமோ கொடுத்து உபசரிப்பார். விழாக்காலங்களில் எங்கள் எல்லாரையும் திரைப்படத்துக்கு அனுப்பிவிட்டு எங்களுக்கு உணவு சமைத்து வைப்பார். சிலநேரம் மகனின் வற்புறுத்தலுக்கு இணங்கி எங்களோடு படம் பார்க்க வருவார். அவருக்கு உதவ பார்வதி, தாயம்மாள், செல்லத்தாயி எனப் பலர் முன்வருவர். நெல்லைக்குச் சென்று மாமனார் வாங்கிவரும் அரை கிலோ அல்வாவை, ஏசு அப்பத்தைப் பங்கிட்டுக் கொடுத்தது போல எல்லாருக்கும் கொடுத்து மகிழ்வார். தாராளம், தயை இவற்றின் உருவமாகத் திகழ்ந்த அவரை மாமியாராகப் பெற்றது பெரும்பேறு. எங்கள் உறவினர் வட்டத்தில், ‘சுந்தரி மகன் - மருமகள்’ என அறிமுகம் ஆகும்போது பெருமிதம் உண்டாகும். அவரைப்போல ஆக முடியவில்லை என்பதற்காக அவரைச் சிலாகிக்காமல் இருக்க முடியுமா? - வேலம்மாள் முத்துக்குமார், பணகுடி, திருநெல்வேலி.