

ஆணுக்கும் பெண்ணும் தனித்தனியாக உடைகளை வடிவமைத்து வைத்திருந்த முன்னோர்களின் நடைமுறையப் பின்பற்றாமல் தங்களுக்கெனப் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ‘ஜென் Z’ என அழைக்கப்படும் இந்தத் தலைமுறை இளைய சமூகம். திரைப்படக் கதாநாயகர்கள் பரபரப்புக்காகப் பெண்களின் உடைபோன்ற ஆடையை திரையில் அணிந்துவந்ததை, இன்றைய தலைமுறை, தங்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்திவருகிறார்கள். இருபாலினத்தவருக்கும் பொதுவான ஆடைகளே இவர்களது தேர்வு. ஆடைத் தேர்வில் பாலினப் பாகுபாடு தேவையில்லை என்பது இவர்களது வாதம்.
இருபாலினத்தவருக்கும் பொதுவான ஆடைகள் தங்களுக்கு ஏற்புடையதாக இருப்பதாகச் சொல்லும் ‘ஜென் Z’ தலைமுறையினர், ‘ஆடை விஷயத்தில் தர்க்கப்பூர்வமாகப் பதில் இல்லாதவற்றுக்காக நாம் ஏன் எல்லைகளை வகுக்க வேண்டும்?’ எனக் கேட்கின்றனர். உலகளாவிய கவனத்தைப் பெறும் நோக்கிலும் இளையோர் மத்தியில் ஆடை சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஆடைகளை அணிந்து தங்கள் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றிவருகிறார்கள்.