

தனியாகத் தெருவில் உறங்கும் பெண்களை நீங்கள் எப்போதாவது கடந்திருக்கக்கூடும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மட்டும் தனியாக இருப்பதில்லை. ஓர் இரவை ஆளே இல்லாமல் தெருவில் கழிக்கக்கூடிய துயரம் யாருக்கும் வரக் கூடாது. அந்தத் துயரத்தைப் பல பெண்கள் குடும்பங்களின் நிராகரிப்பால் சுமந்துகொண்டு வாழ்கிறார்கள். சில பெண்கள் அவர்களாகவே ஏதேதோ காரணங்களுக்காகக் குடும்ப அமைப்பை விட்டு வெளியே வந்து, பொருளாதாரச் சுதந்திரமும் இன்றி, வேறு பிடிமானங்களும் இன்றி தனியே தெருக்களில் படுத்து உறங்குகிறார்கள்.
இந்தப் பெண்களிடம் நாம் பேச்சுக் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அல்லது நேரவிருந்த பாலியல் தொல்லைகளைப் பற்றிச் சிறிதும் தயக்கம் இன்றிச் சொல்லித் தீர்வார்கள். ஆனால், அவர்களுடைய கண்களில் ஒரு துளி கண்ணீர் இருக்காது. இதுவரை தான் அனுபவித்த வலி எல்லாமே அதீதமானது என்று ஒருவர் நினைக்கும்போதுதான் அவருக்கு நெஞ்சை முட்டிக்கொண்டு கண்ணீர் பிரவாகமெடுக்கக்கூடும். ஆனால், இந்தப் பெண்களுக்கோ பாவம் -பேசி முடித்த அன்றேகூடப் பல்வேறு விதமான தொல்லைகள் நிகழக்கூடும். முடிவில்லாமல் இருக்கக்கூடிய ஒரு பெரும் துயரத்தை, அது தொடருமா முடிந்துவிடுமா என்கிற கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் அவர்களால் எப்படிக் கண்ணீரைச் சுமக்க இயலும்? கண்ணீர் விடக்கூட முடியாமல் அவர்களை யாருமற்றவர்களாக ஆக்கிவிட்ட வாழ்க்கை இது.