

நான் இல்லத்தரசியாக இருந்த நாட்கள் அவை. கணவரின் ஊதியம் மட்டுமே குடும்பத்திற்கு வாழ்வாதாரம். பொதுச் செலவுகள் பலவற்றுக்கும் அதைத்தான் நம்பியிருந்தோம். அதில் இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் படிப்புக்கேற்ற வேலையைப் பல இடங்களில் கேட்டுப் பார்த்தேன். பிள்ளைகள் சிறியவர்களாக இருந்ததால், அவர்களைப் பராமரித்துவிட்டுக் குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிற மாதிரியான வேலை எனக்குக் கிடைக்கவில்லை. பிறந்தநாளுக்குக்கூடப் பிள்ளைகளுக்கு வளையல், பாசி, பொட்டு என மிகச் சிறிய பொருட்களைக்கூட என்னால் வாங்கிக் கொடுக்க இயலாத சூழ்நிலை. அனைத்துக்கும் கணவரையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை.
அப்போதுதான் மனதில் அந்தத் திட்டம் தோன்றியது. பிள்ளைகள் இருவரிடமும், ‘அப்பா தீனி வாங்கக் கொடுக்கிற காசு எல்லாத்தையும் தீனி வாங்கிடாம, கொஞ்சம் காசைப் பள்ளியில் சிறுசேமிப்பில் சேர்த்து வைக்கணும். ஏன்னா, உங்க ரெண்டு பேரோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சாதாரணமா ஒரு துணி, வளையல், பாசி, பொட்டு வாங்கணும்னாகூட எவ்வளவு சிரமப்படறோம். எல்லாத்துக்குமே உங்கப்பாவைத்தானே எதிர்பார்க்க வேண்டியிருக்கு’ என்று பக்குவாமாக எடுத்துச் சொல்லி புரியவைத்தேன். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், புரிந்துகொண்டு அதன்படியே சேமிக்கத் தொடங்கினார்கள்.