

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவருபவர் ரஞ்சிதா. மூன்றாம் முறையாகக் கருவுற்றிருக்கும் இவர், மகப்பேறு விடுப்புக்காக விண்ணப்பித்திருந்தார். முதல் இரண்டு குழந்தைகளுக்குத்தான் மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும் என்று கூறிய மாவட்ட கூடுதல் நீதிமன்றம், ரஞ்சிதாவின் கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஞ்சிதா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேம்ந்த் சந்தன்கௌடர் அடங்கிய அமர்வு, ‘பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு என்பது பிரசவத்துக்கும் முன்னும் பின்னும் அவர்கள் அனுபவிக்கும் வலிக்கும் வேதனைக்கும் ஆதரவாக உடன்நிற்பது’ எனக் குறிப்பிட்டனர். முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்தான் மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும் என்பது எந்தவிதமான அடிப்படையும் அற்றது எனக் கூறி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.