

கல்லூரியில் படிக்கும்போது, “அம்மா எனக்கு இந்த ஆறிப்போன இட்லி வேணாம், சூடா இருந்தா கொடு. அப்பா என் ஐ.டி. கார்டை எங்கயாச்சும் பாத்தீங்களா? சைக்கிளைக் கொஞ்சம் துடைச்சு தாப்பா” என அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகவே பெரும்பாலான பெண்கள் வளர்வார்கள். ஆனால், திருமணத்துக்குப் பின் அவர்கள் வாழ்வே தலைகீழாகிவிடுகிறது. புகுந்த வீட்டில் அவள் பம்பரம்போல் சுழன்றுகொண்டிருப்பாள். “என்னங்க உங்களுக்கு இன்னொரு இட்லி வேணுமா? இதோ வரேன் அத்தை” என வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான விஷயங்களை அவள் செய்தபடி இருப்பாள்.
அழகாக வளர்ந்த செடியை வேரோடு பிடுங்கி புகுந்தவீட்டில் நடுகிறார்கள். புதிய சூழலைச் சுவீகரித்துக்கொண்டு வாழும் பெண்களுக்கு அங்கே அங்கீகாரம் மட்டும் கிடைப்பதே இல்லை. திருமண பந்தத்துக்காக அனைத்தையும் சகித்துக்கொள்ளும் மனைவிகள் இங்கு ஏராளம்.
ஞாயிற்றுக்கிழமையில்கூடப் பெண்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. அதிகாலையிலிருந்து அரக்கப் பரக்க வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகளை, ‘அவ வீட்டில் சும்மாதான் இருக்கா’ என்று வாய் கூசாமல் சொல்கிறோம். மனைவி என்பவள் ஒரு தாயாக, தோழியாக, குடும்பத்தைத் தாங்கும் தூணாக எனத் தன் சுயத்தை இழந்து நிற்கிறார். ஆனால், மனைவி குறித்த நகைச்சுவைகளை மட்டுமே பதிலுக்கு நம் சமூகம் அவர்களுக்குப் பரிசாகத் தருகிறது.
மனைவியின் பிறந்த நாள் எப்போது, உங்கள் மனைவிக்குப் பிடித்த நிறம் எது, உங்கள் மனைவிக்குப் பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன என்று கேட்டால் பெரும்பாலான கணவர்கள் சொல்லும் பதில் ‘தெரியல’ என்பதாகவே இருக்கும்.
கேள்விக்கான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகளைக் கொடுத்தாலும் கூட அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது கூடுதல் சோகமே. சாப்பிட்டியாம்மா, உடம்பு சரியில்லையா, ஏன் முகம் வாடியிருக்கு, உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரலாமா எனக் கேட்கும் கணவர்கள் இங்கு மிகவும் குறைவே. இத்தகைய கேள்விகளைக் கணவர்கள் கேட்டால், மனைவியின் மன வலி மறைவது மட்டுமல்லாமல் மறந்தே போய்விடும். ஆனால், அதைக் கேட்கப் பெரும்பாலான கணவர்களுக்கு இன்றும் மனம் வரவில்லை என்பதே யதார்த்தம்.
- ம.ஜெயமேரி, க.மடத்துப் பட்டி.