

தனியாக வாகனங்களில் பயணம் செய்யும்பெண்கள் என்றுமே தனியாகப் பயணம் செய்வதில்லை. அவர்களுடன் பிரச்சினை களும் பாலியல் இச்சை சார்ந்த வன்முறைகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பெண் தனியாகப் பயணம் செய்வது என்பது மிகுந்த வலி தரக்கூடியது. எத்தனை வயதானாலும் எல்லாப் பெண்களுக்கும் தனியாகச் செல்லும் பயணங்களில் பெரும்பாலும் சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
என்னுடைய தோழி ஒருத்தி நீண்டதூரப் பயணம் செல்லும்போது அவளுக்கு எதிர் இருக்கையில் இருந்த ஒருவன் அவனுடைய கீழாடையைச் சட்டெனக் கழற்றி இருக்கிறான். அது எவ்வளவு பெரிய சங்கடத்தை அவளுக்குத் தந்திருக்கும் என்று அவள் அதைச் சொல்லும்போதே கைகள் நடுங்கியதன் மூலமாக நான் அறிந்துகொண்டேன். எப்படி அவ்வளவு ஒரு துணிவு ஓர் ஆணுக்கு வரும் என்று இந்த நொடி இதை எழுதும்போதுகூட எனக்குச் சத்தியமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.