

என் மாமா மகள் லட்சுமியைத்தான் நான் மணந்துகொண்டேன். திருமணத்தின்போது அவருக்கு 18 வயது. பிளஸ் டூ முடித்திருந்தார். நான் பெங்களூருவில் பணியில் இருந்ததால் திருமணம் முடிந்து அங்கே சென்றோம். அவராகச் சமையல் பழகி, குழந்தையைப் பார்த்துக்கொண்டே தொலைநிலைக் கல்வி மூலம் பி.ஏ. எம்.பி.ஏ. படிப்புகளை முடித்தார். பிறகு சொந்த ஊருக்குத் திரும்பினோம். கோவையில் எனக்குப் பணி. என் மனைவி சிறுதானிய உணவு குறித்த ஆர்வத்தில் நிறைய பயிற்சிகள் பெற்று, இயற்கை உணவகம் ஒன்றை எங்கள் ஊரில் 2012இல் தொடங்கினார். பெண்களை மட்டுமே கொண்டு, எவ்வித முன்அனுபவமும் இன்றி சிறப்பாக உணவகத்தை நடத்தினார். பல பத்திரிகைகளில் அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
பிறகு குழந்தைகளைக் கவனிப்பதற்காக உணவ கத்தை மூடிவிட்டார். பிறகு எங்களது தயாரிப்புகளை இணையம் வழியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப ஆரம்பித்தார். வியாபாரம் சூடுபிடிக்கவே, என்னையும் வேலையில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லித் தன் வியாபாரத்தில் இணைத்துக்கொண்டார். தற்போது எங்களது ‘ஆரோக்யம் இயற்கை அங்காடி’சார்பாக இந்தியா மட்டுமல்லாமல்வெளிநாடுகளுக்கும் பொருட்களை அனுப்பி வருகிறார்.