Published : 29 Jul 2018 12:58 PM
Last Updated : 29 Jul 2018 12:58 PM

எசப்பாட்டு 46: பெண்களைத் துளைக்கும் பார்வை

ஐஸ்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவின் மீது தன் கருத்தைத் தெரிவிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் உன்னுர் ப்ரா கொண்ட்ரோஸ்டொட்டி என்பவர் அழைக்கப்பட்டார். அப்போது அவர் இருக்கையில் அமர்ந்தபடி தன் ஆறு மாதக் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார். தான் அழைக்கப்பட்டதும் அவர் அப்படியே நாடாளுமன்றத்தின் மேடையேறித் தன் கருத்தைப் பேசிவிட்டு இறங்கினார்.

குழந்தைக்குப் பாலூட்டியபடியே அவர் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ உலகம் முழுவதும் பகிரப்பட்டு பேசுபொருளானது. ஆனால், அவர் இப்படிப் பாலூட்டியபடி பேசியதை ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் ஒருவர்கூட ஒரு பொருட்டாக்கித் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இதெல்லாம் அந்த நாட்டில் சாதாரணம். பொது இடங்களில்  தாய்மார்கள் பாலூட்டுவது அங்கு மிக இயல்பான நிகழ்வு. ‘தாய்மார்கள் பாலூட்டும்  அறை’ என்று தனி இடம் அத்தகைய நாட்டில் தேவைப்படவில்லை.

ஏன் ஈர்ப்பு வருகிறது?

இதற்கு ஒரு முன் கதை இருக்கிறது. 2015-ல்  ஐஸ்லாந்தின்  பள்ளி மாணவி  ஒருத்தி தன் மார்பைப் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அவளுடைய சக மாணவன் ஒருவன் இதற்குப் போட்டியாக மார்பு தெரிய மேலாடையின்றிப் படம் எடுத்து வெளியிட்டான். அந்தப் பெண் தன் படத்தைச் சில நிமிடங்களில் நீக்கிவிட்டாள். என்றாலும் நாட்டில் ஒரு பிரளயத்தைக் கிளப்ப அந்தச் சில நிமிடங்கள் போதுமானவையாக இருந்தன.

அந்தப் பையனின் படத்தை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை. ஆனால், அந்தப் பெண் குழந்தை அப்படிச் செய்தது தவறா சரியா என்று நாடு முழுவதும் விவாதம்  கிளம்பிவிட்டது. ‘மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கண் திறந்ததும் விழிப்பது தனக்குப் பாலூட்டும் தன் தாயின் பால்காம்புகளில்தான்.

பின்னர் அது ஏன் பார்க்கக் கூடாத ஒன்றாக ஆக்கப்பட்டது? ஆணுக்கும் மார்க்காம்புகள் இருக்கின்றன. அதைக் காட்டுவதும் சட்டையின்றிப் பிறர் முன் நடமாடுவதும் இயல்பானதாக ஏற்கப்படும்போது பெண்ணின் உடம்பின் பிற பகுதிகளைப் போலத்தானே மார்பும் என ஏன் இயல்பாக எடுத்துக்கொள்ள மறுக்கிறோம்? இது ஆணாதிக்கப் பார்வையன்றி வேறென்ன’ என்பது அந்தப் பெண்ணின் செயலை ஆதரிப்போர் வாதம்.  ‘அதெல்லாம் தப்பு. அப்புறம் சமூகத்தில் களேபரம் ஆகிவிடும்’ என்பது எதிர் வாதம்.

எதிர் வாதத்தில் இன்னொரு வாதம் என்னவெனில் ‘மறைபொருள்’ என ஏதும் இல்லாவிட்டால் பாலியல் ஈர்ப்பே மறைந்துபோகும் - மரத்துப்போகும் என்பது.

ஆனாலும், ஐஸ்லாந்து நாடு முழுவதும் தாய்மார்கள் அந்தப் பெண்ணின் சில நிமிடச் செயல்பாட்டுக்கு ஆதரவாகப் பொதுவெளிகளில் அமர்ந்து தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை ஒரு இயக்கமாகவே நடத்தத் தொடங்கினர். அது தேசம் முழுதும் தீயாகப் பரவியது. அதன் ஒரு பகுதியாகவே நாடாளுமன்றத்தில் அந்த உறுப்பினர் பாலூட்டியபடி பேசியதும் நிகழ்ந்தது.

தன் குழந்தை பால் அருந்துவதைப்  பிறர் பார்க்கக் கூடாது, அது குழந்தைக்கு ஆகாது  என்ற நம்பிக்கைசார்  உளவியல்  நம் நாட்டுத்  தாய்மார்களிடம் உண்டு. அதனால், வீடுகளிலும்கூட முந்தானையால் குழந்தையை மூடியபடி பாலூட்டும் தாய்மார்கள் உண்டு. நைட்டி அணியும் பழக்கம் பரவலான பிறகும் மேலே  ஒரு துண்டைப்போட்டு மூடியபடி பாலூட்டும் பழக்கம்  இதனால்தான் தொடர்கிறது. அது பிரச்சினையில்லை.  ஆண்களின் வெறிப்புதான்  பொதுவெளியில் பாலூட்டும் பழக்கம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்பதே இங்கு விவாதப் பொருளாகிறது.

பார்வையில் மாற்றம் வேண்டும்

காலம் காலமாகப் பெண்ணின் மார்பை  உற்றுப் பார்க்கும் உளவியல்  நோய்க்குள் ஆண்கள் சிக்கியுள்ளோம். அதை விடுவிக்க உலக அளவில் Free The Nipple  என்ற பிரச்சார இயக்கம் பத்தாண்டுகளுக்கு மேலாகச் சமூக வலைத்தளங்களிலும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் தெருக்களிலும் நடந்துகொண்டே இருக்கிறது. ஆண்-பெண் சமத்துவத்துக்கான அந்த இயக்கம் ஏன் இப்படிப் பேர் சூட்டிக்கொண்டது என்று கேட்கும்போது, ‘எங்கள் உடம்பை உங்கள் பார்வையிலிருந்து நாங்கள் மீட்க வேண்டியுள்ளது. ஆணின் பார்வையில் அடிப்படையான மாற்றங்களை நாங்கள் கோருகிறோம்’ என்று சொல்கிறார்கள்.

இந்தப் போராட்ட வடிவம் சரியா தவறா என்று  விவாதிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இந்தியா போன்ற பிற்போக்குத்தனங்கள் ஊறியிருக்கும் நாட்டில் இத்தகைய போராட்ட வடிவங்கள்  பெண்ணுக்கு இன்னும் கூடுதலான ஆபத்தை ஏற்படுத்தலாம்.

முன்னத்தி ஏர்

ஐஸ்லாந்து நாடு அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்-பெண் சமத்துவத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததில் உலகத்தில் முதலிடத்தில் நிற்கிறது. உலகின் முதல் பெண் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்த நாடு மட்டுமல்ல; நாட்டின் சகல துறைகளிலும் கிட்டத்தட்ட சரிசமமாகப் பெண்களைப் பணியமர்த்தியிருக்கும் நாடு.

திருமணம் செய்துகொண்டால்தான் பெண் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என்ற கற்பிதத்தைத் தகர்த்தெறிந்து, அதைப் பெண்ணின் விருப்பமாக ஆக்கிய சமூகம். குழந்தைகளுடன் தனித்து வாழும் தாய்மார்கள் மிக அதிகமாக உள்ள நாடு.

‘லிவிங் டுகெதர்’ எனப்படும் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதையும்  30-40 வயதில் திருமணம் செய்துகொள்வதையும் பெண் தனித்து வாழ்வதையும்  சாதாரண விஷயமாக ஆக்கியுள்ள நாடு. அங்கேயும் பாலியல் வன்முறை இருக்கிறது. அதை எதிர்த்த இயக்கமும் தீவிரமாக இயங்குகிறது. குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக வாழ, அரசாங்கமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விடுதிகளை நடத்துகிறது. இது  தந்தை பெரியார் கனவு கண்ட, ‘பெண்கள் நிலையங்கள்’ அல்லாமல் வேறென்ன?

உளவியல் மாற்றம் தேவை

அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகம். நாம் எங்கோ கீழே கிடக்கிறோம். ஆகவே, நாம் அது போல ‘மார்பக விடுதலை இயக்க’மெல்லாம் நடத்த முடியாது. ஆனால், பெண் உடல் ஆண் உடலைப் போல இயல்பாகப் பார்க்கப்பட வேண்டும். அதற்கான உளவியல் மாற்றம் ஆண்களிடமும் பொதுச் சமூகத்திடமும் ஏற்பட வேண்டும் என்ற போராட்டத்தின் உள்ளடக்கத்தில் எனக்கு உடன்பாடுதான்.

பெண் உடலை உற்று நோக்குவதும் அவள் அவயங்களை வர்ணிப்பதும் அதன் வழியே பெண்ணை உடலாக மட்டுமே நிலைநிறுத்துவதும் ஆணாதிக்கச் சமூகமாக மாறிய பழங்காலந்தொட்டு நம் நாட்டிலும் உலகத்திலும் இருப்பதுதான். தமிழில் இது வகை தொகை இல்லாமல் போனபடியால் இதை ஒரு வரைமுறைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் ‘உவமான சங்கிரகம்’ என்ற பேரில் மூன்று நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

சங்க காலம் முதல் பெண்ணின் ஒவ்வோர் உடல் உறுப்பும் எப்படி ஆணின் ‘வெறிப்பு’க்கு ஆளானது என்பதைத் தன், ‘ஆண் ஆளுமையில் பெண் கற்பு’ என்னும் நூலில் அ.செல்வராசு விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

உலகம் முழுவதுமே இந்த  ‘உற்று நோக்கல்’ இருக்கிறதுதான். அது அந்தரங்கமான  குறிப்பிட்ட காலத்துக்குள்  தாம்பத்தியத்தின் பகுதியாக மட்டும் இருக்கும்போது சுமையாவதில்லை. இன்று பெண்களின் சுதந்திரமான இயக்கத்துக்கே  தடையாக மாறுமளவுக்கு விரிந்துவிட்டதால் இத்தகைய இயக்கங்கள் மேற்கில் எழுந்துள்ளன. நம் நாட்டில் இப்படியான இயக்கம் வருமானால் அது Free From Nipple என்பதாக ஆண்களை  நோக்கியதாகத்தான் அமைய வேண்டியிருக்கும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x