ஏன் கௌசல்யாக்கள் நம் சமூகத்திற்குத் தேவை? | உரையாடும் மழைத்துளி 46
மேலூரில் நடந்த சதீஷ்குமாரின் ஆணவக் கொலையை நம் தமிழ்ச் சமூகத்தினர் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. ராகவியின் தந்தைக்குத் தொடர்புடையவர்கள் விபத்து போல அவர்கள் மீது காரை மோதி கொலை செய்த பிறகு சதீஷின் சடலம் பிணவறையில் யாருமே பெற்றுக் கொள்ளாமல் இருப்பது எவ்வளவு துயரமானது. ஒருவருக்கு மரணம்கூடக் கண்ணியமானதாக இருக்க வேண்டும் இல்லையா? ஆனால், காதலித்த ஒரே ‘பாவத்திற்காக’ விபத்துபோல் நடந்த கொலையினால் ஒட்டுமொத்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட கொடூரம் வேறு எங்கேயுமே நடக்காது. அதைப் பற்றி எல்லாம் நாம் பெரிதும் கவலைப்படாமல் அரசியல் சூழலில் என்ன நடக்கிறது என்று கவலைப்படுகிறோம்.
மனித மாண்புகளும் மனித விழுமியங்களும் முற்றிலுமாகக் காணாமல் போய்விட்ட ஒரு காலக் கட்டத்தில் காதல் மட்டும் தன்னுடைய மாண்பை நிலை நிறுத்திக்கொள்ள ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கவினைக் காதலித்த சுபாஷினி தன் பெற்றோருக்கு ஆதரவாகப் பேசிய வீடியோவை நாம் பார்க்கும்போது அது கவினை மறுபடியும் கொலை செய்ததைப் போலத்தான் இருந்தது. அந்தப் பெண்ணின் நிலைமை அப்படித்தான், அவள் பாவம் என்றெல்லாம் பெருமூச்சுகளோடு சொல்லப்பட்ட விமர்சனங்களை நாம் புறந்தள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். நமக்குத் தேவை சுபாஷினிகள் அல்ல, கௌசல்யா சங்கர்கள்தான்.
