

நகரமாக நிர்மாணிக்கப்பட்டு 386 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் பழமையின் எச்சங்களோடும் புதுமையின் பிரதிபலிப்போடும் திகழும் சென்னையின் சீரிளமைக்கு அதன் உழைக்கும் மக்களே காரணம். சம உரிமையும் சம வாய்ப்பும் மறுக்கப்பட்ட நிலையிலும் சென்னையின் வளர்ச்சியில் பெண்கள் தங்கள் தடத்தைப் பதிக்கத் தவறவில்லை.
நடுத்தர, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களே உண்மையான வளர்ச்சிக்கான பாதையைஅமைக்கும் என்பதை உணர்ந்திருந்தார் கட்டிடப் பொறியாளர் மே ஜார்ஜ். கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற நான்காவது பெண்ணான இவர், தமிழகத்தின் முதல் தலைமைப் பொறியாளராக அறியப்படுகிறார். அடித்தட்டு மக்களுக்காக சென்னை பாடியில் இவர் வடிவமைத்த தொகுப்பு வீடுகள் இவரது கட்டிடக் கலைத் திறனுக்குச் சான்றுகள். வட்ட வடிவத்தில் கழிவுநீர் மேலாண்மையோடு சிறப்பாக வடிவமைத்திருந்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள தொகுப்பு வீடுகளுக்கான திட்டத்தை வடிவமைத்தவரும் இவரே.