

சமீப காலமாக எனக்கு மிகவும் எதார்த்தமான ஒரு உண்மை புரியத் தொடங்கியுள்ளது. ஆனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. காரணம், பொதுவாக நான் பெண்களோடுதான் அதிகமாகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறவள். ஆனால், ஏனோ என்னால் பெண்களுடன் மிக சுமுகமாகப் பணியாற்ற இயன்றதில்லை என்பதுதான் எதார்த்தம்.
தனிப்பட்ட முறையில் பெண்களுடன் பழகுவதில் எந்தச் சிரமமும் இருப்பதில்லை. அவர்களுடன் பல்வேறு விஷயங்களை என்னால் பகிர்ந்துகொள்ள முடிகிறது. என்றாலும், வேலை என்று வந்துவிட்டால் அவர்களுக்குள் பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற பல்வேறு விதமான தன்மைகள் கொண்ட ஒரு மனநிலை மேலெழும்பிவிடுகிறது. சின்ன இழையாய் ஒருவிதமான பொறாமை உணர்வு மேலோங்கி இருப்பதை நான் பல்வேறு நேரத்தில் உணர்ந்திருக்கிறேன். ‘உன்னைவிட எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல. பின்பு ஏன் உனக்குக் கிடைக்கும் அளவுக்குப் பரவலான ஒரு பாப்புலாரிட்டி எனக்குக் கிடைக்கவில்லை?’ என்கிற கேள்வியைப் பல பெண்களிடம் மறைமுகமாக நான் உணர்ந்திருக்கிறேன்.