

அந்தக் காலத்தில் கட்டம் போட்டு வெளியாகும் சி.ஐ.டி. கதைகளைச் சிறு வயதிலேயே விரும்பிப் படிப்பேன். என் அப்பா, ஆனந்த விகடனையும் குமுதத்தையும் படிப்பார். நானும் அவரைப் பார்த்து ‘ராணி’ இதழைப் படிக்கத் தொடங்கினேன். கல்கி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்களை ரசித்துப் படிக்கத் தொடங்கி, கல்லூரியில் சேர்ந்ததும் அவற்றை அப்படியே விட்டுவிட்டேன். பிறகு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது.
ஒரு முறை பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவின்போது நான்தான் பேச வேண்டும் என்று முதல் நாள் சொன்னார்கள். உடனே காமராஜர் பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்து அடுத்த நாள் பேசினேன். மேடையேறியதும் சில நொடிகள் தயங்கினாலும் பிறகு பேசி முடித்தேன். நன்றாகப் பேசியதாகப் பலரும் பாராட்டியது என்னை வியக்கவைத்தது. முதல் முறை பேசியபோதே இவ்வளவு கைதட்டல்கள் கிடைக்கக் காரணம் நான் படித்த புத்தகங்களில் இருந்த கருத்துகள்தான் என்பது புரிந்தது. அதுதான் மீண்டும் என்னைப் படிக்கத் தூண்டியது.