

உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட எங்கள் குடும்பப் பின்னணியில் பல முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவாகக் காரணமாக இருந்தவர் எங்கள் அத்தைப் பாட்டி (தந்தைவழி தாத்தாவின் தங்கை) அலமேலு. மணமானவுடன் கணவனின் வேலை நிமித்தமாக மூன்று குழந்தைகளுடன் தஞ்சை, சிதம்பரம், டெல்லி, பாம்பே என்று வாழிடத்தை மாற்றிக்கொண்டாலும் அவருடைய பெரும் பகுதி சென்னையில்தான் கழிந்தது. எங்கள் கிராமங்களில் இருந்து படிப்பு, வேலை, பயணம், மருத்துவம் நிமித்தமாக யார் சென்னை சென்றாலும் பாட்டி வீட்டில்தான் தங்குவர். எவரேனும் ஒருவர் பாட்டி வீட்டில் தங்கி அவர்கள் மேற்படிப்பைத் தொடர்வார்கள். இரண்டு மூன்று தசாப்தங்களாக இதுதான் வழக்கம்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடர அவருடைய பிள்ளைகளுடன் என் தந்தையையும் சென்னைக்கு அவர் அழைத்துச் சென்றது நாங்கள் செய்த நல்லூழ்! அடுத்த தலைமுறையான நாங்கள் அதன் முழுப் பயனையும் அனுபவிக்கிறோம். தன்னை முழு மனிதனாக மாற்றியவர் தன் அத்தை என்று என் தந்தை அடிக்கடி அன்புடன் நினைவுகூர்வார். என் தாயும் அவரை ‘அம்மா’ என்றழைத்தே அன்பு பாராட்டுவார். நாங்களும் அவர் வருகை தரும் விடுமுறை நாட்களை எதிர்நோக்கி இருப்போம். பெரும்பாலும் திருவிழா, கோயில் உற்சவம் போன்றவற்றையொட்டி பாட்டியின் வருகை அமையும்.