பெண்களின் சென்னை | சென்னை 386
இந்திய அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. பெண்களின் சமூக – தொழில் பங்களிப்பு அதிகமாக இருக்கும் முதல் மூன்று நகரங்களில் சென்னையும் ஒன்று. புள்ளிவிவரங்கள் இப்படிச் சொல்வதாலேயே பெண்கள் அனைத்துவிதமான உரிமைகளும் பெற்றுச் சமூகத்தில் சமநிலை எய்திவிட்டார்கள் என்று பொருள் அல்ல. ஆனால், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட உரிமை மறுக்கப்பட்டு, குழந்தை உற்பத்தி சாதனமாக மட்டுமே பெண்கள் நடத்தப்பட்டு வந்த நிலையோடு ஒப்பிடுகையில் பெண்கள் இன்று அடைந்
திருக்கும் உயரம் மகத்துவமானது.
சென்னை நகரம் தற்போது அடைந்திருக்கும் பெருவளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்கள் எப்போதுமே உழைப்புக்கு அஞ்சியதில்லை. 1639இல் மதராசப்பட்டினம் உருவானபோது பெண்களின் அடிமை நிலையில் பெரிய மாற்றமில்லை. ஆனால், தங்களை வீழ்த்தத் துடித்த சமூகக் கட்டுப்பாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் உறுதியோடு எதிர்த்து நின்று போராடி வென்றனர். பெண்களின் பங்களிப்போடுதான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ‘மெட்ராஸ்’ வளர்ச்சிபெற்று இன்று ‘சென்னை’யாகப் பரிணமித்திருக்கிறது.
