பக்கத்து வீடு: மக்களின் பிரதமர்

பக்கத்து வீடு: மக்களின் பிரதமர்
Updated on
2 min read

ஜசிண்டா ஆடர்ன், உலகின் மிக இளமையான ஐந்தாவது பிரதமர். பதவியில் இருக்கும்போதே குழந்தை பெற்ற இரண்டாவது பிரதமர் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.

நியூசிலாந்தின் 40-வது பிரதமராகவும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருக்கும் இவர், கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார்.

பேறுகாலச் சலுகை

குழந்தை பெற்ற இரண்டாவது நாளில் மகளை உலகத்துக்கு அறிமுகம் செய்த கையோடு, ‘பெற்றோருக்குச் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 18 வாரங்களிலிருந்து 22 வாரங்களாக அதிகரிக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் முதல் சில ஆண்டுகள் முக்கியம் என்பதால் வாரத்துக்கு 60 டாலர்களும் குளிர்காலத்தைச் சமாளிப்பதற்கு ஆகும் செலவுகளுக்காக 700 டாலர்களும் வழங்கப்படும்’ என்று ஜசிண்டா அறிவித்திருக்கிறார்.

பிரதமராகப் பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டார். எளிதில் அணுகக்கூடியவராகவும் கருத்துகளைப் பரிமாறக்கூடியவராகவும் மாற்றுச் சிந்தனை கொண்டவராகவும் இருக்கிறார். நியூசிலாந்தின் சிறிய நகரமான ஹாமில்டனில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா காவல்துறையிலும் அம்மா பள்ளியில் உதவியாளராகவும் பணியாற்றினார்கள். இறை நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால், பெரும்பாலும் தேவாலயத்திலேயே ஜசிண்டா வளர்ந்தார்.

அவருடன் படித்த மாணவர்கள் வெறும் கால்களில் பள்ளிக்கு வருவதையும் கிடைத்த உணவைச் சாப்பிடுவதையும் கண்டார். குழந்தைகளை வறுமையிலிருந்து விடுவிடுக்க வேண்டும் என்று அப்போதே நினைத்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய அத்தை மேரி ஆடர்ன், தொழிலாளர் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். விரைவிலேயே கட்சி உறுப்பினரானார்.

அரசியல் அறிமுகம்

படித்து முடித்து, சில காலம் கடைகளில் வேலை செய்தார். மேற்படிப்பு முடித்த பிறகு, நியூசிலாந்து பிரதமராக இருந்த ஹெலன் கிளார்க் அலுவலகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். பிறகு இங்கிலாந்து சென்று, அப்போதைய பிரதமர் டோனி ப்ளேருக்கு பாலிசி அட்வைசராக இருந்தார். சில காலம் அமெரிக்காவிலும் பணியாற்றினார். 2008-ல் இண்டர்நேஷனல் யூனியன் ஆஃப் சோஷலிஸ்ட் யூத் அமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக ஜோர்டான், இஸ்ரேல், அல்ஜீரியா, சீனா உட்பட இன்னும் பல நாடுகளில் பணியாற்றினார்.

நாடு திரும்பியவர் கட்சியில் செல்வாக்கு பெற ஆரம்பித்தார். பத்தாண்டுகளில் கட்சியின் முக்கிய முகமாக மாறினார். கடந்த ஆண்டு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் திடீரென ராஜினாமா செய்ததால், சில மாதங்களிலேயே கட்சியின் தலைவர் பொறுப்பு ஜசிண்டாவுக்கு வந்துசேர்ந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றிபெற்று, நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமரானார்.

இரண்டு அறைகள் கொண்ட வீட்டில்தான் இப்போதும் வசிக்கிறார். அவரே கார் ஓட்டிக்கொண்டு செல்கிறார். நேரம் கிடைக்கும்போது சமையலும் செய்கிறார். வீட்டுக்குத் தேவையான பொருட்களைத் தானே கடைகளுக்குச் சென்று வாங்கிக்கொள்கிறார். “இயல்பாக இருப்பதால்தான் மக்களுடன் நெருங்கிப் பழக முடிகிறது. அவர்களின் கருத்துகளைக் கேட்க முடிகிறது. உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்க முடிகிறது. பொதுமக்கள் என்னுடன் செல்ஃபி எடுக்கும்போதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது” என்கிறார் ஜசிண்டா.

இடதே நல்லது

பிரதமராக இருந்தாலும் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் பேரணியில் கலந்துகொண்டார். தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு ஆதரவு அளிக்கிறார். வறுமையிலிருந்து குழந்தைகளை விடுவிக்கப் போராடுகிறார். அணு ஆயுதத்தை எதிர்க்கிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுகிறார். தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கிளார்க் கேஃபோர்ட் என்ற வானொலி-தொலைக்காட்சி நிறுவனப் பணியாளருடன் வாழ்ந்துவருகிறார். “ஜூன் 21 அன்று ஆம்புலன்ஸை வரவழைக்காமல் அரசாங்க மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றேன். மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. மற்றவர்களைப் போலவே வரிசையில் நின்று, சிறப்புக் கவனம் எதுவும் கோராமல், குழந்தையைப் பெற்றெடுத்தார் ஜசிண்டா. இதன் மூலம் அரசாங்க மருத்துவமனைகளின் தரம் நன்றாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்” என்கிறார் கிளார்க் கேஃபோர்ட்.

மக்களுக்குப் பேறுகால விடுப்பு 22 வாரங்கள் வழங்கிய ஜசிண்டா, குழந்தை பிறந்த ஆறாவது வாரத்தில் பணிக்குத் திரும்ப இருக்கிறார். முழுநேரத் தந்தையாக, வீட்டிலிருந்து குழந்தையை கிளார்க் கவனித்துக்கொள்வார் என்று அறிவித்திருக்கிறார். இந்த விஷயம் நியூசிலாந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

“முதலாளித்துவம், புலம் பெயர்ந்தவர்களையும் அகதிகளையும் வீடற்றவர்களையும் பசியால் வாடுபவர்களையும்தான் அதிக அளவில் உருவாக்கிவருகிறது. அதனால்தான் நான் இடதுசாரிகள் பக்கம் நிற்கிறேன்” என்று சொல்லும் ஜசிண்டா, தன் மகளுக்கான பெயரை நியூசிலாந்து பழங்குடி மக்களிடம் கேட்டிருந்தார். அவர்கள்  சொன்ன பெயர்களை இணைத்து, ‘நீவ் டி அரோஹா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அந்தப் பெயருக்கு அன்பு என்று அர்த்தம்.

அரசியல் புரிதல் கொண்ட பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரும்போது நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு ஜசிண்டாவே சாட்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in