

என் வாழ்க்கையில் மறக்க முடியாத – மறுக்க முடியாத ஒருவர் என் சித்தி சரோஜா ஸ்ரீகாந்தன். என் அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டி. செல்லமாக வளர்க்கப்பட்டவர். கல்வியில் நாட்டமில்லை என்றாலும் கருத்துடையவர். எட்டாம் வகுப்புவரை அவர் கற்ற கல்வி அவரது நுண்கலைத் திறனுக்குத் துணைபுரிந்தது. ‘கண் பார்த்ததைக் கை செய்துவிடும்’ திறமைகொண்டவர்.
பதினோரு வயது வரை என்னை வளர்த்த அன்புத்தாய். அதன் பிறகு அவர் திருமணமாகிச் சென்றதுமே நான் என் அம்மாவுடன் வசித்தேன். விட்டகுறை தொட்டகுறையாக, கல்லூரிப் படிப்புக்குச் சித்தியின் வீட்டிலேயே தங்கவேண்டிய சூழல். சித்தப்பா, என் மற்றோர் அன்புத் தந்தை. சித்தப்பா - சித்தி இருவரது அரவணைப்பில் இளைப்பாறி என் கல்லூரிப் படிப்பை முடித்தேன்.