

நெடுஞ்சாலைகளில் இப்போதெல்லாம் பெரும்பாலும் பலரும் தனியார் வாகனங் களில்தான் பயணம் செய்கிறார்கள். அப்படிப் பயணம் செய்யும்போது பொதுவாகப் பெண்களுக்கு மிக மிகச் சிரமமான விஷயம் சரியான முறையில் கழிப்பறைகள் இல்லாததுதான். சரி - இருக்கின்ற பெட்ரோல் பங்குகளிலும் பேருந்துகள் நிறுத்தப்படும் சில மோட்டல்களிலும் கழிவறைகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தால் அவை எல்லாம் சுகாதாரமற்று மிக மோசமான நிலையில் கிடக்கின்றன. ஆண்களுக்கு அவ்வளவாக இல்லாத உடல்ரீதியான பெரும் பிரச்சினையான சிறுநீர்ப்பாதைத் தொற்று பெண்களுக்கு இதனாலயே அதிகம் ஏற்படுகிறது.
நான் பத்து வருடங்களுக்கு முன்பாகப் பல்வேறு இடங்களுக்கு ஆவணப்படத்தின் படப்பிடிப்புகளுக்காகச் சென்று வரும்போது என்னுடன் வரக்கூடிய சக ஊழியர்களில் ஆண்கள் ஒருபோதும், ‘நீங்கள் கழிவறைக்குச் செல்ல வேண்டுமா?’ என்று பேச்சுக்குக் கூடக் கேட்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு அது குறித்த ஒரு லஜ்ஜை உண்டு. எனவே, ஒரு பயணத்தில் அவர்களிடம் பேசுவதற்குக்கூட எங்களுக்குப் பெரிதாக விஷயங்கள் இருந்ததில்லை. ஆனால், இன்றுள்ள இளைஞர்களைப் பார்க்கும்போது அவர்கள் தங்களுடன் பயணம் செய்யும் பெண்களிடம், ‘உங்களுக்கு பெட்ரோல் பங்கிற்குச் செல்ல வேண்டுமா, கழிவறைக்குச் செல்ல வேண்டுமா, நாங்கள் வண்டியை நிறுத்த வேண்டுமா?’ என்று அக்கறையுடன் கேட்கிறார்கள். பெண்களுக்கும் இயற்கை உபாதை உண்டு, அவர்களது உடலும் தங்கள் உடலைப் போன்றதுதான் என்கிற புரிதலின் வேறொரு பரிமாணம்தான் இது என்று நான் மிகத் தீர்மானமாக நம்புகிறேன்.