

சமையலின் அரிச்சுவடிகூடத் தெரி யாமல் இருந்த சௌமியா இன்று சிங்கப்பூரின் சிறந்த சமையல் கலை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் வெற்றிப் பயணம், நம் மனதுக்குப் பிடித்த உணவைப் போல அவ்வளவு ருசிக்கிறது. ‘மாஸ்டர்செஃப் சிங்கப்பூர்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளார்களில் ஒருவராகத் தேர்வான இவர், பாரம்பரியமும் புதுமையும் இணைந்த உணவு வகைகளைச் சமைப் பதில் கைதேர்ந்தவர்.
பெங்களூருவில் பிறந்து பெற்றோரின் பணி நிமித்தம் டெல்லியில் வளர்ந்தவர் சௌமியா வெங்கடேசன். ராஜன் பிரபுவை மணந்துகொண்டு சென்னை மருமகளானவர், சில ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் குடியேறினார். அங்கே இவருக்கு ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை. கணவர் வங்கிகளுக்கான தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். 20 வயதாகும் மகன், சிங்கப்பூர் ராணுவச் சேவையில் இணைந்திருக்கிறார். திருமணத்துக்கு முன்பு வரை சாப்பிடுவது மட்டும்தான் சமைய லறைக்கும் தனக்குமான தொடர்பாக இருந்தது எனச் சிரித்தபடி சொல்கிறார் சௌமியா.
அம்மா தந்த பரிசு: “கல்யாணத்துக்குப் பிறகு நாளைக்குக் காலையில் என்ன சமையல் என என் கணவர் கேட்டபோதுதான், அதைப் பற்றிய நினைப்பே வந்தது. டெல்லியில் நான் தினமும் பிரெட் சாப்பிட்டு வளர்ந்ததால், அவருக்கும் பிரெட்டில் வெண்ணெய் தடவிக் கொடுத்தேன். எனக்குக் காய்ச்சல் இல்லையே என்றார். இங்கே காய்ச்சலுக்குத்தான் பிரெட் சாப்பிடுவார்களாம். உடனே அம்மாவும் பாட்டியும் போன்வழியே உதவினார்கள். அவர்களிடம்தான் சமையலைக் கேட்டுக் கேட்டுக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொன்றையும் எப்படிச் சமைப்பது என என் அம்மா தன் கைப்பட எழுதிப் பரிசளித்தது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது” என்று சொல்லும் சௌமியா, ‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சி மூலம் ஊரறிந்த பிரபலம் ஆனார்.
“சிங்கப்பூரில் அந்த நிகழ்ச்சி நடைபெற விருப்பதை ஊடகங்கள் மூலம் அறிந்த என் அலுவலக நண்பர்கள் என்னை விண்ணப்பிக்கும்படி சொன்னார்கள். தயக்கத்தோடுதான் விண்ணப்பித்தேன். தேர்வான பிறகு வெற்றிபெற வேண்டுமே என்கிற பதற்றம் இல்லாமல் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சுற்றையும் மகிழ்ச்சியோடு அனுபவித்தேன். தெரிந்ததைச் சமைத்தேன். இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது, கனவு நனவானதைப் போல இருந்தது” என்று சொல்பவரின் கண்களில் அன்றைய நாளின் மகிழ்ச்சி மின்னுகிறது.
தன் சமையல் அனுபவங்களை வலைப்பூவில் எழுதிவந்தவர் பின்னாளில் அதை ‘கெச்சில் கிச்சன்’ என்கிற பாப் - அப் நிறுவனமாக மாற்றினார். கெச்சில் என்றால் மலாய் மொழியில் ‘சிறிய’ என்று பொருளாம். பல உணவகங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமான இது சிங்கப்பூரில் ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது.
கெச்சில் கிச்சன்: “ஒருவர் எங்களிடம் வருகிறார் என்றால் அவர்களுடைய உணவகம் எந்த இடத்தில் இருக்கிறது, அவர்களின் வாடிக்கையாளர் யார், சமையலறையில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அங்கிருக்கும் சமையல் நிபுணர்களின் திறமை என்ன என்று ஒவ்வொன்றையும் பார்த்த பிறகே என் வேலையைத் தொடங்குவேன். பரபரப்பான வர்த்தக நகரில் இருந்த ஒரு உணவகத்தில் இருந்து எங்களை அணுகினார்கள். விசாரித்தபோது அந்த உணவகத்தில் விலை அதிகம் என்பது வாடிக்கையாளர்களின் கருத்தாக இருந்தது. விவசாயிகளிடம் இருந்து பசுமையான காய்கறிகளைக் கொள்முதல் செய்வதால் உணவின் விலை கூடுதலாக இருப்பது புரிந்தது.
அதை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் நான்கு விதமான உணவு வகைகளைப் பரிந்துரைத்தேன். சிங்கப்பூரில் இந்தியர்கள், சீனர்கள், மலேசியர்கள், பெரனாகன் (சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் மலேயர்கள், இந்தோனேசியர்களை மணந்துகொண்ட சீனர்கள். இந்தப் பிரிவினரும் பூர்வகுடிகள். இவர்களுக்குத் தனித்த பண்பாடும் உணவுப் பழக்கமும் உண்டு) ஆகியோருக்கான உணவு வகைகளைப் பரிந்துரைத்தேன். ஒவ்வொரு உணவுக்கு முன்பும் அது சார்ந்த ஒரு கதையைச் சொன்னேன். அது வாடிக்கையாளருக்குத் தங்கள் முன் இருக்கும் உணவின் மீதான மதிப்பைக் கூட்டியது. இது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய உணவு என்பதால் மக்கள் குவிந்தனர். இந்த உணவுத் திருவிழாவுக்குப் பிறகு உணவகத்தின் வழக்கமான மெனுதான் இருக்கும். ஆனால், உணவுத் திருவிழாவின் மூலம் பலர் வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள்” என்று தங்கள் நிறுவனத்தின் அணுமுகுறை குறித்து விளக்குகிறார் சௌமியா.
சிங்கப்பூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பாகும் சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இவரைப் பார்க்கலாம். இந்தியாவில் தன் சகோதரரின் நிறுவனமான ‘டிஜிவிருத்தி’யின் செயல் இயக்குநராகவும் இவர் பணியாற்றி வருகிறார். நெஸ்லே, யுனிலீவர் உள்ளிட்ட உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுசார் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டுவருகிறார்.
உணவுத் திருவிழா: சிங்கப்பூரின் 60ஆவது தேசிய நாளைக் கொண்டாடும் விதமாக ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’, ‘தி இந்து பிசினஸ் லைன்’ ஆகியவை இணைந்து நடத்தும் ‘சிங்கா 60’ என்கிற பிரம்மாண்ட கலைத் திருவிழாவின் ஒருபகுதியாக சிங்கப்பூர் உணவுத் திருவிழாவும் இடம்பெறுகிறது. சென்னை, தி.நகரில் உள்ள ‘தி ரெசிடன்சி’ உணவகத்தில் அங்கிருக்கும் சிறந்த சமையல் கலைஞர் களோடு இணைந்து சிங்கப்பூரின் உணவு வகைகளைப் பாரம்பரியமும் புதுமையும் இணைந்த சுவையுடன் விருந்து படைக்கிறார் சௌமியா.
“இந்த உணவுத் திருவிழாவில் இந்தியா, மலேசியா, சீனா, பெரனாகன் - யுரேஷியன் ஆகிய நான்கு நாடுகளின் உணவு வகைகளும் உண்டு. இந்தியாவின் மசாலா சேர்த்து சீன முறையில் செய்யப்படும் தாகு சம்பல், புளி, வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் தமிழ்நாட்டின் தெருவோர உணவை மையப்படுத்திய ரோஜாக், இந்திய – மலாய் கலப்பில் நூடுல்ஸ், மட்டன் வைத்துச் செய்யப்படும் மீ கோரிங், தேங்காய்ப்பால், அரிசி சேமியா, இறால் போன்றவற்றை வைத்துச் சமைக்கப்படும் மீ சியாம் ஆகிய நான்கு உணவு வகைகளும் இந்திய உணவு வகையின் கீழ் தயாராகும்.
இவை தவிர சீனாவின் சீ குவே, மலாய் உணவான ரெண்டாங், பெரனாகன் உணவான பாங் சூசி உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகளும் உண்டு” என ஒவ்வொரு உணவின் செய்முறையையும் சௌமியா விளக்கும்போதே, உணவின் மணம் நாசியைத் துளைப்பதுபோல் இருக்கிறது.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா