

அன்புள்ள சுபாஷினிக்கு என்று இந்தக் கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ஆசைதான். ஆனால், அவ்வாறு தொடங்க மனமில்லை. ஏனெனில், ஒரு உயிரின் மரணத்துக்குக் காரணமாக இருந்தவர் சாட்சி வாக்குமூலமாக, ‘என் அம்மாவும் அப்பாவும் இதற்குக் காரணம் இல்லை’ என்று எவ்வளவு நிர்பந்தம் வந்தபோதும் சொல்லியிருக்கக் கூடாது. பத்து வருடங்களாகத் தொடர்ந்து காதலித்துவந்த கதை, அதுவும் தென்தமிழகத்தின் தெற்குக் கோடியில் இருக்கக்கூடிய ஒரு ஊரில் உள்ள வீட்டினருக்குத் தெரியவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே இயலாது.
தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்கிற குற்ற உணர்வில் இளவரசன் இறந்த அன்றே மனதளவில் பாதி உயிரிழந்திருப்பார் திவ்யா. அதைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? இளவரசன் இறந்த அன்று திவ்யாவைச் சந்திக்க நான் சென்றிருந்தபோது திவ்யாவின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்று மட்டும்தான் எனக்குக் கவலையாக இருந்தது. ஆனால், திவ்யாவும் இளவரசனும் சேர்ந்து நின்றாற்போல் இருந்த ஒரு தட்டியை உடனடியாக அகற்றச்சொல்லி காவல்துறையில் அன்றே திவ்யா புகார் அளித்தது என்னை மனமுடையச் செய்தது.