

இந்து தமிழ் திசை நாளிதழின் ‘பெண் இன்று’ சிறப்புப் பக்கம் சார்பில் 13 ஜூலை அன்று திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் வாசகியரின் உற்சாகம் கரைபுரண்டது.
திருமணத்துக்குப் பிறகும் சாதனை: விழாவில் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா பேசும்போது, “பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 1957ஆம் ஆண்டிலிருந்து பெண் தீயணைப்பு அலுவலர் பணியாற்றவில்லை. தற்போது முதல் முறையாக எனது பெயர் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நம்மை நம்பி எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் அதைத் திறம்படச் செய்ய முடியும் என்பதைப் பெண்கள் நிரூபிக்க வேண்டும். நமக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும். நான் திருமணம் முடிந்து 5 வயதில் மகன் இருக்கும்போதுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்து வெற்றிபெற்றேன். திருமணம் ஆகிவிட்டால் படிக்க முடியாது என்பது உண்மையல்ல. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்” என்று கூறினார்.