

இந்த உலகத்தில் எது நிலையானதாக இருக்கிறதோ இல்லையோ ஆண்கள் செய்யும் வேலை - பெண்கள் செய்யும் வேலை என்கிற பாகுபாடு மட்டும் நிலையானதாக இருந்துவிடுமோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், எப்போதுமே வேலை என்பது உடல் சார்ந்த ஒரு பங்களிப்பு. அதற்கு ஆண் - பெண் என்கிற பேதம் கிடையாது. வேண்டுமானால் ஓர் ஆண் செய்யக்கூடிய மிகக் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் சில வேலைகளைப் பெண்கள் செய்வதில் சிலநேரம் சிரமங்கள் இருக்கக்கூடும். உதாரணமாக லாரியில் மூட்டை ஏற்றும் வேலையை அவ்வளவு எளிதாக ஓர் ஆணைப் போலப் பெண் செய்துவிட இயலாது. அதை ஒப்புக்கொள்ளும் அதேநேரம், ஒரு வாகனம் ஓட்டும் வேலையையோ மருத்துவத் தொழிலை மேற்கொள்வதோ எந்தவிதமான பாலின வேறுபாட்டுக்குள்ளும் வராதவை.
கடமையும் கௌரவக் குறைவும்: என்றாலும், நம் சமூகம் எப்போதுமே வேலைகளையும் ஆண் - பெண் என்று பிரித்து வைத்திருக்கிறது. அதனாலயே ஆண்களுக்கான கூலி அதிகமாகவும் பெண்களுக்கான கூலி அல்லது ஊதியம் குறைவாகவும் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. இன்றும்கூடச் சில ஊடகங்களில் பெண் மருத்துவர், பெண் போலீஸ் என்று குறிப்பிடப்படுகிறது. பாலின பேதங்கள் இது போன்ற மொழி அளவில் தீர்க்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்பதே பாலினச் சமத்துவத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.